|
புதன்கிழமை, 15 பிப்ரவரி 2012 18:11 |
|
சங்கரன் கோவில் இடைத்தேர்தல் மற்ற இடைத்தேர்தல்களை விட அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. குறிப்பாக விஜயகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும் சட்டப்பேரவையில் நடந்த மோதலுக்குப் பிறகு இந்த இடைத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
உங்களுக்கு உண்மையிலேயே திராணி இருந்தால், சங்கரன் கோவில் இடைத்தேர்தலை தனியாக நின்று சந்தித்துப் பாருங்கள் என்று விஜயகாந்தைப் பார்த்து சவால் விட்டார். இந்தச் சூழலில்தான் சங்கரன் கோவில் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.

எல்லா இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சியினர் அரசு அதிகாரத்தை முழு அளவில் பயன்படுத்துவார்கள். ஒட்டு மொத்த அரசு நிர்வாகமுமே அந்த இடைத்தேர்தலை கவனத்தில் கொண்டு செயல்படும். இடைத்தேர்தல் வெற்றி என்பதை எல்லா ஆளுங்கட்சிகளுமே தங்களுடைய தனிப்பட்ட கௌரவப் பிரச்சினையாக பார்ப்பதால், எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுவது வழக்கம். வாக்களிக்கும் மக்களும் கூட, இந்த ஒரு தொகுதியில் எதிர்க்கட்சியினருக்கு வாக்களிப்பதால் என்ன ஆகி விடப் போகிறது, ஆளுங்கட்சி வேட்பாளரை ஜெயிக்க வைத்தாலாவது, தொகுதிக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்ற எண்ணத்திலேயே வாக்களிப்பார்கள். இதனால் ஆளுங்கட்சி வேட்பாளர் எளிதாக வென்று விடுவார்.
இது சங்கரன் கோவில் இடைத்தேர்தலிலும் நடக்கப்போகிறது என்றாலும், இந்த இடைத்தேர்தலை எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி சந்திக்க வேண்டியது அவசியம். 2011 சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அனைத்துக் கட்சி கூட்டணிக்காக விழுந்த திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை, அதிமுகவுக்கா விழுந்த ஓட்டுக்கள் என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துள்ளார் ஜெயலலிதா. கூட்டணி இல்லாமலேயே சட்டமன்றத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்று அறிவித்தார்.
நல்ல எதிர்க்கட்சியாக செயல்படவேண்டிய திமுக, இன்று தன்னுடைய உட்கட்சி பூசல்களாலும், கட்சியை யார் கைப்பற்றுவது என்ற வாரிசு மோதல்களாலும், கட்சிப் பிரமுகர்கள் மீது தொடர்ச்சியாக வரும் வழக்குகளாலும் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களை விமர்சிப்பதற்கு துணிவில்லாமல், கலகலத்துக் கொண்டிருக்கும் கட்சியை எப்படி ஒன்று சேர்த்து வைப்பது என்ற போராட்டத்தில் இருக்கிறது.
விஜயகாந்தின் தேமுதிக இப்போதுதான் தான் எதிர்க்கட்சி என்பதையே, அதுவும், சட்டமன்றத்தில் ஜெயலலிதா நேரடியாக அவமரியாதை செய்த பிறகு உணர்ந்திருக்கிறது.

ஜெயலலிதா விடுத்து இந்த சவாலை விஜயகாந்த் சீரியசாக எடுத்துக் கொள்கிறாரோ இல்லையோ, ஜெயலலிதா மிகவும் சீரியசாக எடுத்துக் கொண்டு இருக்கிறார் என்பது அவர் அமைத்துள்ள தேர்தல் பணிக்குழுவிலேயே தெரிகிறது. சங்கரன் கோவில் இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களில் 36 பேரில் 26 பேர் அமைச்சர்கள் !!!! ஒரு இடைத்தேர்தலுக்கு இத்தனை அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்தது தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவே முதன் முறையாக இருக்கக் கூடும். தானே புயலால் வரலாறு காணாத அளவில் பாதிப்புக்குள்ளான கடலூர் விழுப்புரம் மாவட்டங்களுக்கான நிவாரணப் பணிகளைப் பார்ப்பதற்கு, ஜெயலலிதா இதே போல 26 அமைச்சர்களை அனுப்பியிருப்பாரேயானால், அவரைப் பாராட்டலாம். ஆனால் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை ஹெலிகாப்படரில் பார்வையிட்டு விட்டு, 850 கோடியை நிவாரணத் தொகையாக “எனது” அரசு வழங்கியது என்பதையே சாதனையாக பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.
சங்கரன்கோவில் நகராட்சித் தலைவராக இருக்கும் முத்துச்செல்வியை வேட்பாளராக அ.தி.மு.க. அறிவித்துவிட்டது. முன்னாள் எம்.எல்.ஏ-வான சங்கரலிங்கத்தின் மகளான இவர், இப்போதே வீதி வீதியாகச் சென்று வாக்குச் சேகரிக்கத் தொடங்கி விட்டார். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவது எந்த வகையில் சேரும் என்பது ஜெயலலிதாவுக்கே வெளிச்சம்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன் நடக்கும் பிரச்சாரத்துக்கு ஆகும் செலவு எந்தக் கணக்கில் வைக்கப்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். வேட்பாளர்கள் தேர்தலில் உண்மையில் செய்யும் செலவு எப்போதுமே கணக்கில் காட்டப்படுவதில்லை என்றாலும், தற்போது அதிமுக மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை அந்த போலியான கணக்குக் காட்டும் நடவடிக்கையையும் கேலிக்கூத்தாக்குகிறது.
திராணி இருந்தால் தனித்துப் போட்டியிட்டுப்பாருங்கள் என்று விஜயகாந்துக்கு வீராவேசமாக சவால் விட்டு விட்டு, அதிமுகவினர் எடுக்கும் நடவடிக்கையைப் பார்த்தால், ஜெயலலிதாதான் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று விடவேண்டுமே என்ற பயத்தில் இருப்பது போலத் தெரிகிறது.
ஒரு நல்ல ஜனநாயகத்துக்கு வலுவான எதிர்க்கட்சி என்பது மிக மிக அவசியம். வலுவான எதிர்க்கட்சி இல்லாமல், ஆளுங்கட்சி ஏகபோகமாக இருப்பது எந்த வகையிலும் நல்லதல்ல. குறிப்பாக மக்கள் பிரச்சினையை பேச வேண்டிய சட்டப்பேரவையில், ஆளுங்கட்சியின் துதிபாடிகளை மட்டும் பேச அனுமதி கொடுத்து விட்டு, எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை அவைக்காவலர்களை விட்டு வெளியேற்றுவதும், கோஷம் போட்டுத் தடுப்பதுமான போக்கு தமிழகத்தில் வேரூன்றிப் போயுள்ள சூழலில், ஆளுங்கட்சிக்கு கடிவாளம் போடும் விதமாக, இடைத்தேர்தலில் வலுவான போட்டி அமைவது மிக மிக அவசியம். எதிர்க்கட்சிகள் ஆளுக்கொரு வேட்பாளரை நிறுத்தி, மீண்டும் அதிமுகவை அமோக வெற்றி பெறச் செய்வார்களேயானால், தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டு, அதிமுகவினர் வைத்ததே சட்டம் என்ற நிலை உருவாகி விடும்.
இந்தத்தேர்தலில் மதிமுக நிச்சயம் போட்டியிடும் என்று அதன் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்த மதிமுக, இந்த இடைத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

அதிமுகவுக்கு ஒரு வலுவான போட்டியை உருவாக்க, மதிமுகவின் வேட்பாளரை பொதுவேட்பாளராக அங்கீகரித்து, திமுக, தேமுதிக, இடதுசாரிகள், விடுதலைச்சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற கட்சிகள் ஆதரிக்குமேயானால், சங்கரன் கோவிலில், அதிமுக வெற்றி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்காது. திமுகவோ, தேமுதிகவோ தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்துவார்களே யானால், அது அதிமுகவின் வெற்றிக்கு உதவுவது மட்டுமல்லாமல், சமநிலையற்ற போட்டியாகவும் ஆகி விடும். இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்கும், அதிமுகவின் ஆட்சிக்கு ஒரு கடிவாளம் போடுவதற்கும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் மதிமுகவின் வேட்பாளரை பொது வேட்பாளராக அறிவித்து ஆதரிப்பது ஒன்றே வழி. ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல், இத்தேர்தலை சீரியசாக எடுத்துக் கொண்டு, எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பிரச்சாரத்திலும் ஈடுபடவேண்டும்.
இந்த நடவடிக்கை ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வழிவகுக்கும். எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தங்கள் ஈகோக்களை விட்டு விட்டு, இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்க சம்மதிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
|
|
செவ்வாய்க்கிழமை, 14 பிப்ரவரி 2012 08:12 |
|
மத்திய அரசின் சட்டத்துறை அமைச்சராக இருக்கும் சல்மான் குர்ஷீத் சனியன்று பேசிய பேச்சு விரக்தியின் வெளிப்பாடு மட்டுமல்ல, விஷமத்தனமானது.

உத்தரப்பிரதேச மாநில தேர்தலை பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பிஜேபி இரண்டுமே வாழ்வா சாவா என்ற நோக்கிலேயே அணுகி வருகின்றன. உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் மத்தியில் இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் எதிர்காலத்தை முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சி ஒரு வேளை இத்தேர்தலில் தோல்வியைத் தழுவினால், தற்போது ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகள் காலை வாருவதற்காக சாத்தியக்கூறுகள் ஏராளமாக இருக்கின்றன. மற்ற கட்சிகள் காலை வாரும் அந்த நேரத்தில், திமுக காங்கிரஸ் கட்சியின் சங்கை அறுப்பதற்கு தயாராக காத்துக் கொண்டிருக்கிறது. இந்த விபரங்கள் மற்ற அனைவரை விடவும், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு நன்றாகவே தெரியும்.
தன் மகனை 2014ல் பிரதமராக்க வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கும் சோனியா ஆட்சி கவிழக் கூடாது என்பதில் மிக மிக கவனமான இருக்கிறார். இது தவிரவும், தன் மகன், மகள், மருமகன் ஆகியோரின் செல்வாக்கை நிரூபிக்கும் தேர்தலாகவும் உத்தரப்பிரதேசத் தேர்தல் சோனியாவால் பார்க்கப் படுகிறது.
இந்தியாவை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் ராஜீவ் காந்தி குடும்பத்தில் தற்போது அரசியலில் நுழைந்திருக்கும் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவும், தன் பங்குக்கு தனது அரசியல் ஆர்வத்தைப் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். பொதுமக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவாராம். ராபர்ட் வதேரா அரசியலுக்கு வருவதை விரும்பும் பொதுமக்கள் யாராவது சவுக்கு வாசகர்களாக இருந்தால், வதேராவுக்கு கடிதம் எழுதி, உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள். ராகுல் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரும், கடந்த காலத்தைப் போலல்லாமல், மிக மிகத் தீவிரமாக இத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நான்குமுனைப் போட்டியாக இருப்பதால், இந்தப் போட்டியில் எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முலாயம் ஒரு பக்கமும், மாயாவதி மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஒரு புறமுமாக காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியைத் தந்து கொண்டு உள்ளது.
தலித்துகள் மாயாவதியை விட்டு மாறி வாக்களிக்கப் போவதில்லை. யாதவ்கள் முலாயம் சிங் யாதவ் பக்கமே நிற்பார்கள். மற்ற உயர்சாதி இந்துக்கள் நிச்சயம் பாரதீய ஜனதாவுக்கே வாக்களிப்பார்கள். இச்சூழலில், உத்தரப்பிரதேசத்தில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் முஸ்லீம்களின் வாக்ககளை எப்படியாது பெற்று விட வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியைத் தவிர்த்து அனைத்து கட்சிகளுமே பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றன. முஸ்லீம்களின் வாக்குகளைப் பெறும் கட்சிக்கு உத்தரப்பிரதேசத் தேர்தலில், சாதகத்தன்மை அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே முஸ்லீம்களைக் கவரும் விதமாக கட்சிகள் வாக்குறுதிகளை வாரி வழங்கிக் கொண்டுள்ளன.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சி எப்படியாவது இத்தேர்தலில் வென்று, இந்தியா ராஜீவ் காந்தி குடும்பத்தின் சொத்து என்பதை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது தவிரவும், காங்கிரஸ் கட்சி பலவீனமான நிலையில் இருக்கும் தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்துவதற்கு இத்தேர்தல் பயன்படும் என்று கருதுகிறது.
இப்படிப்பட்ட பின்புலத்தில்தான், உத்தரப்பிரதேசத் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. மாயாவதி தனது கட்சியின் ஒரே ஸ்டார் பிரச்சாரகராக ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். முலாயம் சிங்கும் அவர் மகனும் தங்களது கட்சிக்காக கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாரதீய ஜனதா கட்சிக்கு பல்வேறு தலைவர்கள், பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல், பிரியங்கா மற்றும் சோனியா பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தால், அது ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு கிடைத்த தோல்வியாகவே கருதப்படும் என்பதால், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், அளவுக்கு அதிகமான விசுவாசத்தோடு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தப் பின்னணியில்தான் கடந்த 8 பிப்ரவரி அன்று, உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு தேர்தல் பேரணியில் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மத்திய சட்டம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்ருமான சல்மான் குர்ஷீத் பேசியுள்ளார். அன்றைய பேரணியில் பேசிய குர்ஷீத், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 27 சதவிகித இட ஒதுக்கீட்டில் 9 சதவிகிதம் இசுலாமியர்களுக்காக வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு, அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. இந்த வாக்குறுதி ஒரு அரசியல்கட்சித் தலைவர் வழங்கும் வாக்குறுதியாக எடுத்துக் கொள்ள முடியாது. மத்திய சட்டம் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருக்கும் ஒருவர் சொல்லும் இந்த அறிவிப்பு, நிச்சயமாக தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலாகும். எதிர்க்கட்சிகளின் புகாரைத் தொடர்ந்து, 9 பிப்ரவரி அன்று கூடிய தேர்தல் ஆணையர்கள் குரேஷி, வி.எஸ்.சம்பத் மற்றும் எச்.எஸ்.பிரம்மா ஆகியோர் சல்மான் குர்ஷீத்தை கண்டித்து ஆணை வெளியிட்டனர். அவர்கள் ஆணையில், ‘தேர்தல் ஆணையம் இதன் மூலம் சர்மான் குர்ஷீத்தை கண்டிக்கிறது. அவர் மேலும் இது போன்ற நடத்தை விதி மீறல்களில் ஈடுபடமாட்டார் என்ற நம்புகிறது’ என்று அந்த ஆணையில் தெரிவிக்கப் பட்டது.
மறுநாள் (9 பிப்ரவரி) கடக்பூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய சல்மான் குர்ஷீத், “தேர்தல் ஆணையம் என்னைக் கண்டித்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் என்னைத் தூக்கில் போடட்டும் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். ஆனால் இசுலாமியர்களுக்கு வர வேண்டிய நியாயமான சலுகைகளை நான் வழங்காமல் இருக்க மாட்டேன்.”
சல்மான் குர்ஷீத்தின் இந்த அறிவிப்பு மிகப் பெரிய சர்ச்சையையும், சட்டச் சிக்கலையும் உருவாக்கியிருக்கிறது. இந்தியாவில் நீதித்துறை போல, ஓரளவுக்கு தன்னிச்சையாக, சுதந்திரத்தோடு செயல்படும் அமைப்புகளில், தேர்தல் ஆணையமும் ஒன்று. தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்பது நிலைநாட்டப் பட்டால்தான் நியாயமான முறையில் தேர்தல் நடத்த முடியும். தேர்தல் ஆணையத்துக்கு வரைமுறையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தொடுத்த ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், “பாரபட்சமற்ற முறையில் தேர்தல் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், எங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதற்காக வானத்தை நோக்கி கை கூப்பி வேண்டிக்கொண்டிருக்க முடியாது. நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அத்தனை நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுக்கலாம்” என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
தேர்தல் ஆணையம் மட்டும் சுதந்திரமாக, நியாயமான முறையில் செயல்படவில்லையென்றால், 2011 சட்டமன்றத் தேர்தல் எப்படி நடந்திருக்கும் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள்.
தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமும், அதிகாரமும் நிலைநாட்டப்பட வேண்டியது, ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு அடிப்படையான ஒன்று. அந்த அமைப்பின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குவது இறுமாப்பான காரியம் மட்டுமல்ல, விஷமத்தனமானதும் கூட. அதுவும் சட்டத்துறை அமைச்சரே, இப்படிப்பட்ட காரியத்தைச் செய்திருப்பது வேதனையிலும் வேதனை.
இவ்வாறு சல்மான் குர்ஷீத் பேசிய பிறகு, அவசரக் கூட்டத்தைக் கூட்டிய தேர்தல் ஆணையம், இந்திய ஜனநாயக வரலாற்றில் இல்லாத வகையில், குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியது. அக்கடிதத்தில், “தொலைக்காட்சிகளில் பார்த்த சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத்தின் பேச்சு, தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளை சட்ட அமைச்சர் துச்சமாக மதித்துள்ளதோடல்லாமல், உதாசீனப்படுத்தும் வகையிலும் அலட்சியப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார். இவரின் பேச்சு, இதர வேட்பாளர்கள் நியாயமாக போட்டி போடுவதை தடைசெய்யும் வகையில் உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் உத்தரவு பற்றிய சட்ட அமைச்சரின் இந்தப் பேச்சு, ஒரு அசாதாரணமான சூழலை உருவாக்கியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டபடி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகளுக்காக வருத்தப்படவேண்டிய ஒருவர் அதை எதிர்த்துப் பேசுவதல்லாமல், உதாசீனப்படுத்தவும் செய்திருக்கிறார். இந்த நடவடிக்கை வரலாறு காணாதது. அதனால் தேர்தல் ஆணையத்தின் அவசரக்கூட்டம் இன்று மதியம் கூட்டப்பட்டு, சல்மான் குர்ஷித்தின் நடவடிக்கைகள் நியாயமான தேர்தல் நடத்துவதற்கு குந்தகம் விளைவிக்கும் என்பது குறித்து விவாதிக்கப் பட்டது.

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள சட்ட அமைச்சரே இப்படி தேர்தல் ஆணையத்தை சிறுமைப்படுத்துவது போல நடந்து கொண்டிருப்பது குறித்து ஆணையம் கவலை கொள்கிறது. நியாயமான முறையில் தேர்தல் நடத்துவது ஜனநாயகத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் பொருந்தும் என்பதை குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு கொண்டு வர தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கிய அமைப்புகளுக்குள்ளே இருக்கும் நுண்ணிய சமன்பாடுகள் அமைச்சரின் முறையற்ற, சட்டவிரோதமான செயல்பாடுகளால் பாதிப்புக்குள்ளாக்கப் பட்டுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரபட்சமற்ற முறையில் தேர்தலை நடத்துவதற்கும், தேர்தல் ஆணையம் தன் பணிகளை அரசியல் அமைப்புச் சட்டப்படி செய்வதற்கும், தேர்தல் ஆணையம் உங்களின் தீர்மானமான தலையீட்டை இந்தச் சூழலில் தவிர்க்க இயலாமல் கோருகிறது.” என்று எழுதியுள்ளது.


இந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைத்துள்ளார். ராசா ஊழல் செய்த போது அமைதியாக வேடிக்கை பார்த்தது போல, மன்மோகன் சிங் இதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் இப்படி அமைதியாக வேடிக்கைப் பார்ப்பதும், மேலிடத்தின் ஒப்புதலோடுதான் சல்மான் குர்ஷீத் இப்படிப் பேசியுள்ளார் என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.
சச்சார் கமிட்டியில் தெரிவித்திருந்தபடி, இசுலாமியர்கள் மோசமான நிலையில் 60 ஆண்டுகளுக்கான இருந்ததற்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சியே காரணம். பாபர் மசூதியில் இரவோடு இரவாக சிலை வைக்கப் பட்டது நேரு பிரதமராக இருந்த போது. அந்த இடம் வழிபாட்டுக்கு திறந்து விடப்பட்டது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது. பாபர் மசூதி இடிக்கப் பட்டது நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது. இசுலாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க இப்போது உத்தரப்பிரதேச தேர்தல் சமயத்தில் முனைப்பாக விதிகளை மீறி அறிவிப்புகளை வெளியிடும் காங்கிரஸ் இத்தனை ஆண்டுகளாக இசுலாமியர்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. தேர்தல் நேரத்தில் எப்படியாவது இசுலாமியர்களின் வாக்குகளைப் பெற்று விட வேண்டும் என்ற உத்வேகத்தில் இப்படி காங்கிரஸ் கட்சிப் பேசுவது, ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவது போலத்தான் உள்ளது.
|
|
சனிக்கிழமை, 11 பிப்ரவரி 2012 01:02 |
|
கருணாநிதி எது பேசினாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அப்படி இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்புவார். லாட்டரி அதிபர் மார்ட்டின் தயாரித்து கருணாநிதி கதை வசனம் எழுதிய இளைஞர் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின் போது கருணாநிதி பேசியது, “பேசா படத்தில், திரைக்கு முன்னே படம் தெரிந்தால் கூட, நாம் அமர்ந்திருக்கின்ற இடத்திற்கு பின்னால் ஒருவன் கையிலே மெகாபோனை வைத்துக் கொண்டு, திரையில் என்ன நடக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பான்.
‘அதோ பார், பீமசேனன் வருகிறான், அதோ பார், பகாசூரன் வருகிறான், பீமசேனன் கீசகனை வதைக்கிறான்’ என்பதை வர்ணித்துக் கொண்டே ஒருவன் இருப்பான்.

‘பீமசேனனைப் பார், பகாசூரனைப் பார், பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்’ -என்று வர்ணிப்பான். படம் பார்க்கின்ற யாருக்கும் ‘பல்லுக்குப் பல் இருகாதம்’ என்கின்றானே, எப்படி அது? காதம் என்றால் பத்து மைல் அல்லவா? இருகாதம் என்கிறபோது இருபது மைல் அல்லவா? பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம் என்றால் முப்பதும் இருபதும் ஐம்பது மைல் அல்லவா? ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே ஐம்பது மைல் அகலம் என்றால், வாய் எவ்வளவு அகலம் இருந்திருக்கும்? இப்படி ஒருவர் இருந்திருக்க முடியுமா-பகாசூரன் என்று? அன்றைக்கு யாரும் கேட்டதில்லை. இன்றைக்கு மட்டும் கேட்கிறார்களா என்ன?
ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் என்று சொல்லும்போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்த தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? யாராவது ஒருவர் அதை அபகரித்திருந்தால் இவ்வளவு பெரிய கணக்கை-ஒரு தாளிலே எழுதிக் காட்டினால், அதை எப்படி இன்றைக்கு நம்புகிறோமோ, படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கிற, சட்டம் தெரிந்த, நாணயத்தின் மதிப்பை உணர்ந்த இந்தக் காலத்திலே கூட ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் என்றால் அதை நம்புகின்ற நாம்-அன்றைக்கு “பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்” என்று அவனுடைய வாயே முப்பதாயிரம் மைல் என்று பகாசூரனை வதைத்தபோது, அதை ஆனந்தமாக கேட்டுக்கொண்டுதான் படத்தை பார்த்தோம். அப்படி படம் பார்த்த ஏமாளிகளிலே ஒருவனாக நான் அன்றைக்கு இருந்தேன்.
படம் பார்த்தவர்களுடைய ஏமாளித்தனம் அப்படி இருந்தது. எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு ஒரு மனிதன் அந்த காரியத்தை செய்கிறான் என்றால், அவன் விஞ்ஞான ரீதியாகத்தான் செய்ய முடியும்.”
கருணாநிதியின் பேச்சின் சாரம் என்ன என்றால் ஒருவரே ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழலைச் செய்திருக்க முடியுமா என்பதுதான். அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. இத்தனை ஆயிரம் கோடியை ராசா மட்டுமே சுருட்டி எடுத்துச்செல்வதை காங்கிரஸ் கட்சி அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஆனால் ராசா மட்டுமே இந்த ஊழலை செய்தார் என்று காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல், நீதிமன்றங்களும் சொல்லி வருவதுதான் வேதனையிலும் வேதனை.

கடந்த வாரம் டெல்லி சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே எடுத்துக் கொள்வோம். சிதம்பரத்தை குற்றவாளியாக சேர்க்க சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஓ.பி.சைனி தனது தீர்ப்பில்,
“However, there is no material on record to show that Mr. P. Chidambaram was acting malafide in fixing the price of spectrum at the 2001 level or in permitting dilution of equity by the two companies. These two acts are not per se illegal and there is no further material on record to show any other incriminating act on the part of Mr. P. Chidambaram. A decision taken by a public servant does not become criminal for simple reason that it has caused loss to the public exchequer or resulted in pecuniary advantage to others. Merely attending meetings and taking decisions therein is not a criminal act. It must have the taint of use of corrupt or illegal means or abuse of his official position by public servant for obtaining pecuniary advantage by him for himself or for any other person or obtaining of pecuniary advantage by him without any public interest. There is no material on record to suggest that Mr. Chidambaram was acting with such corrupt or illegal motives or was in abuse of his official position, while consenting to the two decisions. There is no evidence that he obtained any pecuniary advantage without any public interest. I may add that there is such incriminating material against other accused persons, who stand charged and are facing trial.
68. There is no evidence on record to suggest that there was an agreement between him and Mr. A. Raja to subvert telecom policy and obtain pecuniary advantage for himself or for any other person. There is no evidence of any substantive act being committed by him. A bit of evidence here and a bit there does not constitute prima facie evidence for showing prima facie existence of a criminal conspiracy. Anybody and everybody associated with a decision in any degree cannot be roped as an accused. The role played by the decision maker, circumstances in which the decision was taken and the intention of the decision maker are the relevant facts. Intention is to be inferred from the facts and circumstances of the case. One cannot be held guilty merely by association with a decision and a decision by itself does not indicate criminality. There must be something more than mere association. Innocent and innocuous acts done in association with others do not make one a partner in crime, unless there is material to indicate otherwise, which is lacking in this case.
69. In the end, Mr. P. Chidambaram was party to only two decisions, that is, keeping the spectrum prices at 2001 level and dilution of equity by the two companies. These two acts are not per se criminal. In the absence of any other incriminating act on his part, it cannot be said that he was prima facie party to the criminal conspiracy. There is no evidence on record that he was acting in pursuit to the criminal conspiracy, while being party to the two decisions regarding non-revision of the spectrum pricing and dilution of equity by the two companies.”
ஓ.பி.சைனியின் தீர்ப்பை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.
However, there is no material on record to show that Mr. P. Chidambaram was acting malafide in fixing the price of spectrum at the 2001 level or in permitting dilution of equity by the two companies. These two acts are not per se illegal and there is no further material on record to show any other incriminating act on the part of Mr. P. Chidambaram.
2001 விலையில் 2008ல் ஸ்பெக்ட்ரம் வழங்கியதிலும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளிநாட்டுக்கு விற்றதும் சட்டவிரோதமானது அல்ல. மேலும் இதில் சிதம்பரத்துக்கு பங்கு இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.

இதில் முதல் பகுதியை கவனமாக பார்க்க வேண்டும். 2001 விலையில் ஸ்பெக்ட்ரத்தை வழங்கியது சட்டவிரோதமானது அல்ல என்றால், ராசா எதற்காக சிறையில் இருக்க வேண்டும் ? ஒவ்வொரு அரசாங்கத்திலும் நிதித்துறை என்பது மிக மிக முக்கியமானது. நிதித்துறையின் பொறுப்பு, அரசாங்கத்தின் நிதி சரியான முறையில் வரவு வைக்கப் படுகிறதா, சரியான முறையில் செலவு செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்வது. ஒவ்வொரு அரசாணையிலும் பார்த்தீர்கள் என்றால், This order is issued with the concurrence of the Finance Department என்ற வாசகம் தவறாமல் இருக்கும். அரசு நிதி சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களிலும், நிதித்துறை அரசின் நலனை பாதுகாக்கும் வகையில் முடிவெடுக்க வேண்டும் என்பதற்காகவே இருப்பதுதான் நிதித்துறை. அப்படிப்பட்ட நிதித்துறையின் அமைச்சராக இருப்பவர், ஆயிரக்கணக்கான கோடிகள் இழப்பை ஏற்படுத்தும் ஆ.ராசாவின் முடிவுக்கு ஏன் மௌன சாட்சியாக இருந்தார் ? லைசென்சுகள் வழங்கப்பட்ட பிறகு, நிதி அமைச்சகம் ராசாவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறது. “2001ல் முடிவு செய்யப் பட்ட விலையான 1600 கோடி எப்படி 2007ல் பொருந்தும் என்பது புதிராக உள்ளது. இத்தனை பெரிய நிதி விவகாரம் இதில் சம்பந்தப் பட்டிருப்பதால், நிதி அமைச்சகத்தை கலந்தாலோசித்திருக்க வேண்டும். அதனால் உடனடியாக இந்த விஷயத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அது வரை கொடுக்கப் பட்ட லைசென்சுகளை நிறுத்தி வைக்கவும்.” என்று நிதி அமைச்சகம் எழுதுகிறது.
இதன் பிறகு ராசாவும் சிதம்பரமும் சந்திக்கிறார்கள். அந்தச் சந்திப்புக்குப் பிறகு, சிதம்பரம், 2001 விலையில் ராசா லைசென்சுகள் வழங்கிய விவகாரம் ஒரு முடிந்த விவகாரம் என்று பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். இத்தனை ஆயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய விவகாரம் முடிந்து போன விவகாரம் என்று சிதம்பரம் ஏன் சொல்கிறார் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது அல்லவா ? இது ஏன் ஓ.பி.சைனிக்கு தோன்றவில்லை ?

அடுத்த விவகாரம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கி கொள்ளை லாபம் பார்த்த விவகாரம்.
ஜனவரி 2008ல் டாடா நிறுவத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்த ராசா, 2001ல் உள்ள விலையில் ஒதுக்கீடு செய்கிறார். அதாவது டாடா நிறுவனம் ஸ்பெக்ட்ரத்துக்காக செலுத்திய தொகை, 1658 கோடி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப் பட்ட 7 மாதங்களில் டாடா நிறுவனம், அதன் 26 சதவிகித பங்குகளை ஜப்பானைச் சேர்ந்த டோகோமோ என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்கிறது. எவ்வளவு தெரியுமா ? 14,000 கோடி. வெறும் 26 சதவிகித பங்குகள் 13 ஆயிரம் கோடியை பெற்றுத் தந்திருக்கிறது என்றால், டாடா பெற்ற ஸ்பெக்ட்ரத்தின் மதிப்பு எவ்வளவு என்று பாருங்கள்.
ஸ்வான் டெலிகாம் ஸ்பெக்ட்ரம் பெறுவதற்கு அரசுக்கு செலுத்திய தொகை, 12 ஆயிரத்து, முன்னூற்று எண்பத்து ஆறு கோடி. தங்களின் 50 சதவிகித பங்குகளை, துபாயைச் சேர்ந்த எடிசலாட் நிறுவனத்துக்கு விற்ற விலை, 58 ஆயிரத்து நாற்பத்து ஒன்பது கோடி. யூனிடெக் நிறுவனத்துக்கு, ஸ்பெக்ட்ரம் அரசால், 12 ஆயிரத்து, முன்னூற்று எண்பத்து ஆறு கோடிக்கு வழங்கப் பட்டது. நார்வேயைச் சேர்ந்த, டெலிநார் நிறுவனத்துக்கு 67.25 சதவிகித பங்குகளை விற்ற வகையில், யூனிடெக் நிறுவனத்துக்கு கிடைத்த வருவாய், 67 ஆயிரத்து, தொள்ளாயிரத்து, அறுபது கோடி.
கண்முன்பாகவே இப்படிப்பட்ட கொள்ளை நடைபெறுவதை வேடிக்கை பார்த்த சிதம்பரம் தவறு செய்யவில்லை என்று எப்படி சொல்கிறார் ஓ.பி.சைனி… லைசென்ஸ் பெற்ற நிறுவனங்கள், தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்காமல் தடைசெய்வது நிதி அமைச்சகத்தின் பணி அல்லவா ?
மேலும், சுப்ரமணியன் சுவாமி தொடுத்த வழக்கின் மற்றொரு அம்சம், உள்துறை அமைச்சகம் தடை செய்திருந்த இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு - எடிசலாட் மற்றும் டெலிநார் தங்கள் பங்குகளை விற்க அனுமதித்ததன் மூலம் நம்பிக்கை மோசடிக் குற்றத்தை (Criminal Breach of Trust) சிதம்பரம் புரிந்துள்ளார் என்பதுதான். இந்த இரண்டாவது பாகத்தை ஓ.பி.சைனி கண்டுகொள்ளவே இல்லை என்பது வினோதம்.
ஆ.ராசா தொடக்கத்திலிருந்தே சொல்லி வந்தது போல, இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மன்மோகன் சிங்குக்கு தெரிந்தே அத்தனை முடிவுகளும் எடுக்கப் பட்டுள்ளன. இத்தனை விவகாரங்களும் தன் கண் முன்னே நடைபெறுவதைப் பார்த்துக் கொண்டு தடுக்கத் தவறிய மன்மோகன் சிங்கை சிபிஐ சாட்சியாகக் கூட விசாரிக்கவில்லை என்பது விநோதத்திலும் விநோதம். ஸ்பெக்ட்ரம் ஊழலில் மன்மோகன் சிங்கின் பங்கு குறித்து, “ஊமை ஊரைக் கெடுக்கும்” என்ற கட்டுரையை படிக்கவும்.
ஸ்பெக்ட்ரம் விசாரணையில் சிக்காமல் தப்பித்த மற்றொரு முக்கிய நபர், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் குலாம் வானாவதி. வானாவதியின் ஒப்புதலுடனேயே லைசென்சுகள் பெறுவதற்கான கடைசித் தேதி மாற்றியமைக்கப் பட்டது என்றார்.
சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், “A Raja struck out the last para of the press release, at the same time he also inserted in his aforementioned note dated 07.02.2008 the words “press release appd as amended”. This insertion in the note was done willfully by A.Raja after the then solicitor general had had already recorded his note dated 07.01.2008 after his note, on the running note sheet. By this dishonest act A.Raja in conspiracy with accused Siddarth Behura portrayed to the Department of Telecommunication that the amended draft had the consent of the then Learned Solicitor General. In this manner he falsified the records in furtherance of his design to cheat the DoT by manipulating the draft in a manner wrongfully benefitting the accused private persons / companies.”
அதாவது அரசுத் தலைமை வழக்கறிஞர் ஒப்புதல் கொடுத்த வரைவு பத்திரிக்கைச் செய்தியை, தனி நபர்கள் சட்டவிரோதமாக பலனடையும் வகையில் ராசா திருத்தம் செய்துள்ளார், அரசு வழக்கறிஞரின் கருத்தை திரித்து ஏமாற்றியுள்ளார்.
அந்த பத்திரிக்கை செய்தியின் முதல் பாராவில் ட்ராய் 28.08.2007 அன்று ஸ்பெக்ட்ரம் வழங்குவதில், ஒரு வட்டத்துக்குள், வழங்கப்படும் லைசென்சுகளுக்கு வரையறை வேண்டியதில்லை என்று அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, 25.09.2007க்குள் விண்ணப்பித்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு லைசென்சுகளுக்கான கடிதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.”
இதன்படி, ஏற்கனவே 01.10.2007 என்று முடிவெடுக்கப்பட்டிருந்த கடைசி தேதியை ராசா 25.09.2007 என மாற்றுகிறார். இப்படி மாற்றியதன் மூலமாகத்தான் 26.09.2007 முதல் 01.10.2007 வரை விண்ணப்பித்திருந்த 343 விண்ணப்பதாரர்களை தகுதியிழப்பு செய்து, யூனிடெக், மற்றும் ஸ்வான் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்.
பத்தி இரண்டில் பல்வேறு தொழில்நுட்ப விபரங்கள் உள்ளன. மூன்றாவது பத்தியில் ராசா, “தொலைத்தொடர்புத் துறை முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கைளை கடைபிடித்து வருகிறது. அதன்படி முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு லைசென்சுகளுக்கான கடிதம் வழங்கப்பட்டு, அதில் உள்ள விதிமுறைகளை அவர்கள் பூர்த்தி செய்தால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும்”
இது முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு எதிரானது. “விதிமுறைகளை பூர்த்தி செய்வது” என்றால், பல கோடி ரூபாய்க்கு டெபாசிட்டுகளை டிமான்ட் ட்ராப்ட் மூலம் செலுத்துவது. இப்படிப்பட்ட நிபந்தனையை ராசா விதித்ததால்தான், ஏற்கனவே இந்த விதிமுறையைப் பற்றி அறிந்திருந்த ஸ்வான், யூனிடெக், சிஸ்டெமா ஷ்யாம் போன்ற நிறுவனங்கள், குறிப்பிட்ட நேரத்தில் தயாராக வரைவோலையோடு காத்திருந்தன.

சிபிஐ இயக்குநர் மற்றும் வானாவதி
இதற்கு அடுத்து நான்காவதாக இருந்த ஒரு பத்தியை ராசா நீக்குகிகிறார். “ஒரே நாளில் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர் வருவாரேயானால், விண்ணப்பம் அளித்த நேரம் மற்றும் பதிவு செய்த நேரம் (Inter-se seniority) கணக்கிலெடுக்கப்படும்”
இந்த நான்காவது விதிமுறையைத்தான் ராசா வானாவதியின் ஒப்புதலுக்குப் பிறகு நீக்கி முறைகேட்டிலும் ஆவணத்திருத்தத்திலும் ஈடுபட்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறது சிபிஐ.
ஆனால், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கையில், அடிப்படைத் திருத்தத்தைக் கொண்டுவருவதே மூன்றாவது பத்திதான். லைசென்சுக்கான கடிதத்தைப் பெற்று, நிபந்தனைகளை பூர்த்தி செய்பவருக்கே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற நிபந்தனைதான்,
இந்த நிபந்தனை காரணமாகத்தான் 10.01.2008 அன்று மதியம் தொலைத்தொடர்புத் துறை அலுவலகத்தில் அடிதடியோடு ஸ்பெக்ட்ரம் விநியோகிக்கப் பட்டதற்கான காரணமே மூன்றாவது பத்திதான்.
ஆனால், நான்காவது பத்தியை நீக்கியதுதான் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே காரணம் என்று வாதிடுகிறது சிபிஐ. ஆனால் மூன்றாவது பத்தியின் தொடர்ச்சியே நான்காவது பத்தி. முதலில் வருபவர், “அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்” என்ற நிபந்தனையிலேயே அனைத்தும் அடிபட்டுப் போய் விடுகின்றன.
மேலும் சிபிஐ செய்த மிகப் பெரிய அயோக்கியத்தனம், வானாவதியைக் காப்பாற்றியதுதான். ஸ்பெக்ட்ரம் வழங்கும் கோப்பின் முதல் பத்தியிலேயே, ஆ.ராசா அரசு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்டுப் பெறலாம் என்று எழுதுகிறார். இந்தக் கோப்பு சட்ட அமைச்சகத்துக்குச் செல்லும்போது, அப்போதைய சட்ட அமைச்சர் பரத்வாஜ், இந்த விஷயத்தின் முக்கியத்துவம் கருதி, இதை அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பலாம் என்று எழுதுகிறார். வானாவதியைப் பற்றி நன்கு தெரிந்ததால் இப்படி எழுதினாரா என்பது தெரியவில்லை.

வானாவதியை காப்பாற்றுவதற்கு சிபிஐ பகீரத பிரயத்தனம் செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. தொலைத்தொடர்புத் துறை 25.09.2007 என்று கடைசித் தேதியை நிர்ணயித்து வெளியிட்ட பத்திரிக்கைக் குறிப்புக்கு ஒப்புதல் தந்த வானாவதி அந்தக் கோப்பில் கீழ் கண்டவாறு எழுதுகிறார்.
“I have seen the notes. The issue regarding new LoIs are not before any court. What is proposed is fair and reasonable. The press release makes for transperancy. This seems to be in order”

“நான் குறிப்புகளைப் பார்த்தேன். புதிய லைசென்சுகள் வழங்குவது தொடர்பான வழக்குகள் எந்த நீதிமன்றத்திலும் நிலுவையில் இல்லை. எடுக்கப்படப்போகும் நடவடிக்கை நியாயமாக உள்ளது. பத்திரிக்கைக் செய்தி வெளிப்படைத் தன்மையை உறுதி செய்கிறது. சரியாக உள்ளது” என்று எழுதியுள்ளார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க மத்திய அமைச்சரவைக் குழுவுக்கு இந்தக் கோப்பை அனுப்பலாம் என்று சட்ட அமைச்சர் எழுதியுள்ளார் இது வானாவதியின் கண்ணுக்குப் படவில்லை. தொலைத்தொடர்புத் துறையின் நிதிக்கான உறுப்பினர் மஞ்சு மாதவன் அதே கோப்பில், “We are in receipt of a communication dated 22.11.2007 from the Department of Economic Affairs wherein they have expressed concern that we are offering the rates obtained in 2001 as entry fee even in 2007, without any indexation/current valuation… Since the rates have not been revised and the Finance Secretary has raised the issue, I’m of the view that this issue should be examined in depth before any further steps are taken.” என்று எழுதியுள்ளார். அதாவது, 2001 விலையில் 2007ல் லைசென்சுகளை வழங்குவது குறித்து பொருளாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது. விலைகள் மறுஆய்வு செய்யப்படாததாலும், நிதித்துறைச் செயலர் இது குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளதாலும், இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் முன்னர் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று எழுதியுள்ளார். இதுவும் வானாவதியின் கண்ணுக்கு படவில்லை.

மேலும் அரசு வழக்கறிஞர் ஒரு பொருள் குறித்து கருத்து தெரிவிப்பதென்றால், சட்ட அமைச்சகத்தின் மூலமாகத்தான் அந்தக் கோப்பு அவரிடம் வர வேண்டும். சட்ட அமைச்சகத்தின் மூலம் வராமல், நேரடியாக தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து வந்த கோப்பில் வானாவதி கருத்து தெரிவித்தது ஏன் ? மேலும் அதே கோப்பில், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் (ஆ.ராசா) அரசு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கலாம் என்று எழுதியுள்ளதை, சட்ட அமைச்சர் மறுத்துள்ள பிறகும், இப்படி நேரடியாக கருத்து தெரிவித்தது ஏன் ? பிரதமரின் முடிவை மீறி ராசா எடுத்த நடவடிக்கைகள் குற்றம் என்றால், சட்ட அமைச்சரின் கருத்துரையை மீறி, 2ஜி கோப்பில் கருத்துரை அளித்த வானாவதி செய்ததும் குற்றம் தானே.. ?
மேலும் வானாவதி கருத்துரை அளித்தபின், திருத்தப்பட்ட பத்திரிகை செய்தியை ராசா வெளியிட்டார் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு. இதே பத்திரிக்கைச் செய்தியை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும், எஸ்.டெல் நிறுவனத்தின் சார்பாக வழக்கு தொடுக்கப் பட்டது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜராகி வாதாடிய வானாவதி, இதே பத்திரிக்கைச் செய்தியை சரி என்றுதானே வாதடினார் ? பின்னாளில், எஸ்.டெல் நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி, அந்நிறுவனத்தை வழக்கை வாபஸ் பெற வைத்தார் ராசா.
தான் கருத்துரை அளித்தபிறகு, பத்திரிக்கைச் செய்தி திருத்தப்பட்டிருந்தால், அப்போதே வானாவதி எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டுமா இல்லையா ? அப்போதே எதிர்ப்புத் தெரிவித்திருந்தால், இப்படி ஒரு நஷ்டம் ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம் அல்லவா ?
10.01.2008 நாளிட்ட பத்திரிக்கைச் செய்தியின் அடிப்படையில்தான் சிபிஐயின் வழக்கே உள்ளது. அந்தப் பத்திரிக்கைச் செய்தி வெளிப்படைத் தன்மையோடு உள்ளது என்று கருத்துரை அளித்த வானாவதியை குற்றவாளியாக சேர்க்காததன் காரணம் என்ன ?
சிபிஐ செய்த மற்றொரு மிகப்பெரிய அயோக்கியத்தனம், வானாவதிக்கும் ராசாவுக்கும் இடையே சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை என்பது. சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் The investigation has not revealed any discussions with the then Learned Solicitor General என்று சொல்லியுள்ளது.

ஆனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட கடிதத்தில் வானாவதியின் அலுவலகத்திலிருந்தே வந்த பதிலில், 2007 டிசம்பர் முதல் வாரத்தில் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியோடு ஒரு கூட்டம் நடந்ததாகவும், அதில் ஆ.ராசா உடன் இருந்ததாகவும், தொலைத் தொடர்புத் துறை குறித்து விவாதிக்கப் பட்டதாகவும், இந்தக் கூட்டம் குறித்து குறிப்புகள் தயாரிக்கப்படவில்லை என்றும் கடிதம் வழங்கப் பட்டுள்ளது. இந்தச் சந்திப்பை சிபிஐ ஏன் மறைத்தது ? 2007 டிசம்பர் முதல் வாரத்தில் நடந்த இந்தச் சந்திப்புக்குப் பிறகே, வானாவதி (07.01.2008) ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பாக குறிப்பு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

இது போல பல்வேறு கேள்விகள் இன்னும் விடை சொல்லப்படாமலேயே உள்ளன. ஆனால், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் 2ஜி விசாரணை நடைபெறும் போக்கைப் பார்த்தால் அத்தனை ஊழல்களையும் செய்தது ராசா மட்டுமே என்ற தொனியிலேயே நடைபெற்று வருகிறது. ராசா மட்டும்தான் குற்றவாளி என்றால் மற்றவர்கள் அனைவரும் உத்தமர்களா ?

|
|
சனிக்கிழமை, 04 பிப்ரவரி 2012 08:38 |
|
அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தரப் பகைவர்களும் இல்லை என்ற நியதி உண்மைதான் என்றாலும், இந்த வாரம், ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும், சட்டப்பேரவையில் நிகழ்ந்த மோதல் அரசியல் நாகரீகத்தையெல்லாம் குழிதோண்டிப் புதைத்து விட்டது.
விஜயகாந்தை அவைக்காவலர்களை வைத்து வெளியேற்றிய பின் ஜெயலலிதா, “எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொண்ட விதம், அவர் பேசிய அருவருக்கத்தக்க கீழ்த்தரமான பேச்சுகளையெல்லாம் இங்கேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அனைவரும் பார்த்தார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொண்ட விதத்துக்கும், அவருடைய கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதத்துக்கும் தண்டனை அளிக்க வேண்டுமென்றால் அவர்களை இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும்.
ஆனால், அதைத் தவிர்த்து குறைந்தபட்ச நடவடிக்கையாக இந்தப் பிரச்னையை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக பேரவைத் தலைவர் அறிவித்துள்ளார்.
தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்து விட்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக எதிர்க்கட்சித் தலைவரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன. கடந்த ஆட்சியில் நடந்த தவறுகள், நிர்வாகச் சீர்கேட்டின் காரணமாக, எங்கும் மலிந்திருந்த ஊழலின் காரணமாக மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினார்கள். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் இதே வெற்றியைத்தான் நாங்கள் பெற்றிருப்போம்.
அதிமுகவை ஆட்சியில் அமர்த்துவது என தமிழக மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். அதன்படிதான் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் முடிவுகள் அமைந்தன.
தேமுதிகவின் அதிர்ஷ்டம், எங்களுடன் அவர்கள் கூட்டணி சேர்ந்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன; இத்தனை பேரவை உறுப்பினர்கள் இன்று இந்த அவையில் வந்து தேமுதிக சார்பில் அமர்ந்திருக்கின்றார்கள். இந்தக் கூட்டணியில் எனக்குச் சிறிதும் விருப்பம் இல்லை.
எனது கட்சிக்காரர்களை திருப்திபடுத்துவதற்காகவே இந்தக் கூட்டணிக்குச் சம்மதம் தெரிவித்தேன். கூட்டணி அமையாவிட்டாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது. பேரவைத் தேர்தலில் எதைச் சாதித்துக் காட்டினோமோ, அதைவிடக் கூடுதல் இடங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கும்.
தேமுதிகவுக்கு விட்டுக் கொடுத்த தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று இருக்கும். அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் தேமுதிகவுக்கு இத்தனை உறுப்பினர்கள் கிடைத்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தும் கிடைத்தது. பிரதான எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தும் தகுதியும் கிடைத்தது. அதிமுகவுடன் கூட்டணி சேராவிட்டால் தேமுதிகவுக்கு கடந்த தேர்தலில் ஒரு இடம்கூடக் கிடைத்திருக்காது.
தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூடப் புரியாமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது, அவர்களுடன் கூட்டணி சேர்ந்து அதிமுக தேர்தலைச் சந்தித்ததே என நினைத்து வருத்தப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன்.
எதிர்க்கட்சித் தலைவரும் அவருடைய சட்டப் பேரவை உறுப்பினர் களும் நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கும்போது ஒன்று சொல்லத் தோன்றுகிறது. அவர்களுக்கு (தேமுதிக) வர வேண்டிய ஏற்றம், வரக்கூடிய ஏற்றம் எங்களால் வந்து முடிந்து விட்டது. இனிமேல் அவர்களுக்கு இறங்கு முகம்தான். அதைச் சரித்திரம் சொல்லும்” என்று ஜெயலலிதா பேசினார்.

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக அமைந்தது, தேமுதிகவின் கொறடா சந்திரகுமார் பேசிய பேச்சுதான். சந்திரக்குமார் தன் பேச்சில் பேருந்துக்கட்டண உயர்வு மக்களை பாதித்துள்ளது என்று பேசினார். அவரது பேச்சில் குறுகிட்ட அமைச்சர் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, புள்ளிவிபரங்களோடு, டீசல் விலை எத்தனை முறை உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக் கூறினார். சந்திரக்குமார் தொடர்ந்து, பால்விலை உயர்வைப் பற்றிப் பேசினார். செங்கோட்டையன், எங்களைப்போல மாடு வைத்திருப் பவர்களுக்குத்தான் விவசாயிகளின் சிரமம் தெரியும் என்றார். சந்திரக்குமாரும் சளைக்காமல், நாங்களும் தொழிலாளியாக இருந்துதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம் என்றார்.
தொடர்ந்து சந்திரக்குமார், “மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்த கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நிச்சயமாக இந்த பேரவைக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் இந்தப் பேரவையில் பேசினால் எங்களை எல்லோரும் சாடுகிறீர்கள்” என்றார்.
பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, சந்திரக்குமாருக்கு ஆதாரங்களோடு பதில் சொல்லாமல், நீங்களெல்லாம் சட்டசபைக்குள் நுழைந்ததே எங்களால்தான் என்றார். அதற்கு சந்திரக்குமார், எங்களால்தான் நீங்கள் ஜெயித்தீர்கள், உண்மையிலேயே துணிச்சல் இருந்திருந்தால், கட்டண உயர்வுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியிருக்க வேண்டியதுதானே என்றார்.
அப்போது எழுந்த ஜெயலலிதா, “ உறுப்பினர் சந்திரகுமார், விவரத்தின் அடிப்படையே தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது மாநில அரசு அல்ல. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என ஒன்று இருக்கிறது. அதற்கு மின் கட்டணங்களைச் சீரமைப்பது குறித்து மின்சார வாரியம் தங்களது விண்ணப்பத்தை அளிக்கும்.

அதன்பின், அந்த ஆணையம் மாநிலம் முழுவதும் மக்கள் கருத்தை அறிய பல கூட்டங்களை நடத்தும். அது விதிகளில் உள்ள ஒரு நடைமுறை. ஏதோ தான்தோன்றித்தனமாக இந்தக் கருத்துக்கணிப்பு நடைபெறவில்லை. அப்படி நடத்தியாக வேண்டும் என்பது விதிமுறை. மக்களுடைய கருத்தை அறிந்து அதன்பின் அந்த ஒழுங்குமுறை ஆணையம்தான் மின் கட்டணங்களை நிர்ணயிக்கும்.
எனவே, சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் முடிந்தவுடன் மாநில அரசு மின் கட்டணங்களை உயர்த்தி விடும் எனச் சொல்வது பேரவை உறுப்பினரின் அறியாமையைக் காட்டுகிறது. பஸ் கட்டணங்கள், பால் விலையை உள்ளாட்சித் தேர்தலை முடித்து விட்டு உயர்த்தியதாகவும், முன்பே செய்திருந்தால் தெரிந்திருக்கும் என்று சவால் விடும் தொனியில் பேசினார்.
கட்டண உயர்வுகளை அறிவித்த போது, மிகுந்த வருத்தத்துடன் வேறு வழியின்றி இந்த நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக மக்களுக்கு விளக்கிச் சொன்னேன். இங்கு பேசிய சந்திரகுமார், ஒரு சவால் விட்டிருக்கிறார். அவருக்கு பதில் சவால் நான் விடுகிறேன்.
சங்கரன்கோவிலில் நாங்கள் தனித்து வேட்பாளரை நிறுத்தப் போகிறோம். உங்கள் கட்சிக்கு (தேமுதிக) திராணி இருந்தால் தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள். பஸ் கட்டணத்தையும் பால் விலையையும் உயர்த்திய பிறகு சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலில் தனித்து நின்று மகத்தான வெற்றியை நாங்கள் அடைவோம். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். உங்களால் (தேமுதிக) முடியுமா என்பதை யோசித்து விட்டுப் பேசுங்கள்.
இதுதான் தொடக்கப்புள்ளி. ஜெயலலிதாவுக்கு பதிலளிக்கும் வகையில், விஜயகாந்த், “கடந்த 2006 முதல் 2011 வரைக்கும் இடைத்தேர்தல்கள் எவ்வளவோ நடைபெற்றன. அந்த தேர்தல்களில் ஒரு தேர்தலில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. இன்றைக்கு வந்து சங்கரன்கோவிலில் ஜெயிப்பேன் என்று சவால் விடுகிறீர்கள். ஆளுங்கட்சியாக இருந்தால் இடைத்தேர்தலில் எப்படி வெற்றி பெறுவார்கள் என்பது கடந்த காலங்களிலும் தெரியும். இப்போது நீங்கள் எப்படி வெற்றி பெறப் போகிறீர்கள் என்பதும் தெரியும்.
உடனே ஜெயலலிதா, “தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, எதிர்க்கட்சித் தலைவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டார்.”
விஜயகாந்த், “நாங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளவில்லை. நாங்கள் கேட்டதற்கு மட்டும் பதில் தாருங்கள். சங்கரன்கோவில் என்று சொன்னால், பெண்ணாகரத்தில் ஏன் தோற்றீர்கள் என்பதைச் சொல்லுங்கள். அங்கு நடந்த இடைத் தேர்தலில் உங்களுக்கு டெபாசிட் காலி ஆயிற்றே அப்போது என்ன ஆனது ?” என்றார்.
பன்னீர்செல்வம் எழுந்து, “திமுக ஆட்சியில் இடைத் தேர்தல்களில் நாங்கள் (அதிமுக) வெற்றி பெறவில்லை. திமுக எந்த மாதிரியான வெற்றியைப் பெற்றது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். திமுக ஆட்சியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை நடந்தது. சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் 3-ல் 2 பங்கு இடங்களில் கிடைத்த வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் வன்முறை நடந்ததா? முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மகத்தான வெற்றியைப் பெற்று இருக்கிறோம்.”
விஜயகாந்த், “உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை நடந்ததா எனக் கேட்கிறார். தேர்தலின் போது எனது தொகுதிக்குச் சென்றிருந்தேன். அதிகாரிகளை வைத்து தேர்தலை எப்படி நடத்தினார்கள் எனப் பார்த்தேன். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தவறு நிகழ வாய்ப்பு இருக்கிறது என நீங்களே கூறினீர்கள். அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்தோம். நீதிமன்றத்துக்குச் சென்றோம்.”

விஜயகாந்துக்குப் பதிலளிக்க செங்கோட்டையன் எழுந்தார். சபாநாயகர் ஜெயக்குமார், “அமைச்சர் பதில் சொல்கிறார். அமருங்கள். அமைச்சர் பேசுகையில் பேசுவது மரபல்ல” என்றார். உடனே விஜயகாந்த் அமர்ந்தார்.
இதன்பிறகுதான் ரசக்குறைவான சம்பவங்கள் அரங்கேறின. சட்டசபையில் அன்று என்னதான் நடந்தது என்று, அங்கே இருந்த பத்திரிக்கையாளர்களை விசாரித்த போது, விஜயகாந்த் அமர்ந்ததும், அவரை நோக்கி, எம்எல்ஏக்கள், சின்னசாமி மற்றும் கலைராஜன் ஆகியோர் ஆபாசமாக சைகை செய்து, தகாத வார்த்தைகளை தொடர்ந்து பேசியிருக்கின்றனர். நத்தம் விஸ்வநாதன் எழுந்து, “இது சினிமா இல்ல. பத்து பேர நீ அடிக்க முடியாது. உட்காரு…” என்று பேசியிருக்கிறார். இவர்கள் பயன்படுத்தியதில், எழுதக்கூடிய வார்த்தை, “டேய் குடிகாரா உட்கார்றா” என்பது மட்டுமே. மற்றவற்றை யூகித்துக் கொள்ளுங்கள். இதைப்பார்த்துதான் விஜயகாந்த் கடும் கோபம் அடைந்து எழுந்து கையை நீட்டி கடும் கோபத்துடன் நாக்கைக் கடித்துக் கொண்டு, கத்தியிருக்கிறார். கத்துகையில், விஜயகாந்த்தும், தகாத வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.

இதன் பிறகே அவரும், அவர் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும், வெளியேற்றப்பட்டனர்.
ஜெயலலிதா இப்படிப் பேசுவது புதிதல்ல. 1991ல் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும், தற்போது முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவுக்கும், ஏராளமான வேறுபாடுகள் இருந்தது என்றே அரசியல் நோக்கர்கள் கருதினார்கள். இந்த ஆட்சி பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து ஜெயலலிதாவின் நடவடிக்கைகளைப் பார்வையிடுபவர்கள், ஜெயலலிதா பக்குபப்பட்டிருக்கிறார் என்றே கருதினார்கள். ஆனால், சட்டசபை சம்பவங்கள், அது பொய் என்பதை நிரூபித்துள்ளது.
கருணாநிதி ஒரு பிறவி அரசியல்வாதி. அவருக்கு பேச்சு, மூச்சு, உணவு, உடை, நீர், அனைத்துமே அரசியல்தான். தன்னுடைய மனைவிகளுக்கிடையிலும், பிள்ளைகளுக்கு இடையிலுமே அரசியல் செய்யக்கூடியவர் கருணாநிதி.
ஆனால் ஜெயலலிதா அரசியல்வாதியாக சூழல் காரணமாக உருவாக்கப் பட்டவர். ஜெயலலிதாவை ஆங்கிலத்தில் A reluctant politician என்பார்கள். 1989ல் திமுக ஆட்சியின்போதே, ஜெயலலிதா தன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்தக் கடிதம், அப்போது டிஜிபியாக இருந்த துரையிடம் கிடைத்ததும், அதை எடுத்துப் போய் சபாநாயகரிடம் அளித்து, ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ பதவியை பறிக்க முயற்சித்தார்கள். ராஜினாமா செய்து விட்டு, அரசியலை விட்டே ஓய்வு பெற வேண்டும் என்று நினைத்த ஜெயலலிதா, இதன் காரணமாகவே, நான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று அறிவித்தார். அப்போதெல்லாம் ஜெயலலிதா, ஆறு மாதத்துக்கு ஒரு முறை, தன்னுடைய வீட்டு பால்கனியிலிருந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்து விட்டுப் போய்விடுவார். வெளியில் வரவே மாட்டார்.

1996 தேர்தல் தோல்விக்குப் பிறகும், ஜெயலலிதா அரசியலை விட்டு ஓய்வு பெற்று விடலாம் என்ற முடிவுக்கு வந்ததாக தகவல்கள் கூறுகின்றன. எனக்கு இனி அரசியல் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்ததாகத் தெரிகிறது. அந்தத் தேர்தலில், அதிமுக அடைந்த படுதோல்வியையும் தாண்டி, ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகவனத்திடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, மன்னார்குடி வகையறா ஜெயலலிதாவுக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்ற தகவல் கிடைத்ததுமே, ஜெயலலிதா அரசியலை விட்டு விலகலாம் என்ற முடிவுக்கு வந்ததாகவே தெரிகிறது.
ஜெயலலிதாவின் பேச்சும் நடவடிக்கைகளும், அவர் கடந்தகாலத்தில் நடந்த தவறுகளில் இருந்து எந்தப்பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே உணர்த்துகிறது.
“தகுதியில்லாதவர்களுக்கு பெரிய பதவி திடீரென்று வாய்த்து விட்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்” என்று ஜெயலலிதா சொன்னது நாகரீகமற்ற வார்த்தை மட்டுமல்ல ஆங்கிலத்தில் Hitting below the belt என்பார்களே.. அந்த வகையைச் சார்ந்தது. இந்த வார்த்தையை ஜெயலலிதாவைப் பார்த்தும் கேட்கலாம்தானே… “தேமுதிகவின் அதிர்ஷ்டம், எங்களுடன் அவர்கள் கூட்டணி சேர்ந்தார்கள். இந்தக் கூட்டணியில் எனக்குச் சிறிதும் விருப்பம் இல்லை.” என்ற ஜெயலலிதாவின் வார்த்தைகள் அவர் நேர்மையற்றவர் என்பதை வெளிப்படுத்துகின்றன.

2011 தேர்தலில் அல்ல, 2009 பாராளுமன்றத் தேர்தலிலேயே, அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும், கூட்டணி பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடந்தன என்பது ஜெயலலிதாவுக்கு தெரியாமல் இருந்திருக்க முடியாது. 2011 தேர்தலில், தேமுதிக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே, கூட்டணிக்காக தவம் கிடந்தன என்பதே உண்மை. அது வரை ஆண்டவனோடு மட்டும் தான் கூட்டணி என்று சொல்லி வந்தவர், ஏற்கனவே ஆண்டவரோடு கூட்டணி சேர சம்மதித்தன் மர்மம், சோர்வடைந்த தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்ட, வெற்றி ஒன்றே வழி என்பதுதான்.
2011 தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், தன்னுடைய அரசியல் எதிர்காலமே சூனியமாகி விடும் என்பதை ஜெயலலிதா நன்றாகவே உணர்ந்திருந்தார். மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர நேர்ந்தால், பெங்களுரு சொத்துக்குவிப்பு வழக்கில், தண்டனை உறுதி என்பதை ஜெயலலிதா நன்றாகவே அறிந்திருந்தார். மேலும் அதிமுக கட்சியே கரைந்து போகும் சூழ்நிலை இருந்தது என்பதையும் ஜெயலலிதா உணர்ந்திருந்தார். இதைத்தவிரவும், விஜயகாந்த், தொடர்ந்து பெற்று வந்த 9 முதல் 10 சதவிகித வாக்குகள், அவசியம் என்பதை ஜெயலலிதா புரியாதவர் அல்ல. அது நன்கு புரிந்ததால்தான், 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் மூத்த தலைவர் வைகோவின் மதிமுகவுக்கு, 17 சீட்டுகளும், கட்சித் தொடங்கி 3 ஆண்டுகளே ஆன விஜயகாந்துக்கு 41 சீட்டுகளையும் ஒதுக்கினார் ஜெயலலிதா.
கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே, ஜெயா டிவியில், அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. அதில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப் பட்டனர். அதைத் தொடர்ந்து விஜயகாந்தை இடதுசாரி மற்றும் இதரக்கட்சித் தலைவர்கள், சந்தித்து, மூன்றாவது அணி அமைக்கும் திட்டத்தை முன்வைத்தனர். அப்படி மூன்றாவது அணி அமைந்திருந்தால், ஜெயலலிதா இப்படிப் பேசியிருப்பாரா ? உடனடியாக அதிமுகவின் மூத்த தலைவர்களை அனுப்பி, விஜயகாந்தை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது யார் என்பது ஜெயலலிதாவின் மனசாட்சிக்குத் தெரியும்.
“தகுதியற்றவர்களுக்கு ஒரு பெரிய பதவி கிடைத்தால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூடப் புரியாமல் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டிருப்பதை பார்க்கும்போது, அவர்களுடன் கூட்டணி சேர்ந்து அதிமுக தேர்தலைச் சந்தித்ததே என நினைத்து வருத்தப்படுகிறேன்; வெட்கப்படுகிறேன்.” என்ற ஜெயலலிதாவின் பேச்சு, அவரது ஆணவத்தையும், அனுபவமின்மையையுமே காட்டுகிறது.
ஒரு அரசியல்வாதியாக, மூத்த தலைவராக இருப்பவர், யோசித்துப் பேச வேண்டும். மனதில் வந்ததையெல்லாம் பேசக்கூடாது. அதுவும், பதவியில் இருக்கையில், மேலும் கவனத்தோடு இருக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா கடந்த காலங்களிலும் கூட, வாய்க்கு வந்ததையே பேசியிருக்கிறார்.
1991-1996 அதிமுக ஆட்சியில், சட்டப்பேரவையில், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் என்று நினைவு. நெடுஞ்சாலைகளில் அடிக்கடி, கொள்ளைகள் நடப்பதாகக் கூறினார்கள். உடனே ஜெயலலிதா எழுந்து, “மத்திய அரசு எனது ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக ஆட்களை அனுப்பி கொள்ளையடிக்க வைக்கிறது” என்றார். இதைவிட சிறுபிள்ளைத்தனமான பேச்சை எங்காவது கேட்டிருக்கிறீர்களா ?
2001ல், ஜெயலலிதா கஜானா காலி என்றார். கருணாநிதி அரிசி இருக்கிறது என்றார். அதற்கு ஏதாவது பதில் சொல்லவேண்டுமே என்பதற்காக சட்டசபையில் ஜெயலலிதா, அத்தனை அரிசியும் புழுத்துப் போன அரிசி என்றார். அதிமுக அடிமைகள், அரிசி நாற்றம் அடிக்கிறது, விலங்குகள் கூட உண்ணாது என்றனர். லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஜெயலலிதா புழுத்துப்போன அரிசி என்று சொன்ன அத்தனை அரிசியும், அதிக விலைக்கு கேரளாவிற்கு விற்கப்பட்டது. சட்டசபையில் முழங்கிய ஜெயலலிதா அரிசியைப் பற்றி பிறகு பேசவேயில்லை.
சந்தனக்கடத்தல் வீரப்பனைப் பற்றி சட்டசபையில் விவாதம் வந்தது. கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி தினகர் வீரப்பனுக்கு பல கோடி பணம் கொடுக்கப்பட்டது என்று புத்தகம் எழுதியிருக்கிறார் என்று ஜெயலலிதா சட்டசபையில் கூறினார். அந்தப் பணத்தில் கருணாநிதிக்கும் ஒரு பெரும் பங்கு போனது என்று கூறினார். திமுக உறுப்பினர்கள் நிரூபிக்க முடியுமா என்று கேட்டனர். உடனே ஜெயலலிதா இன்றே விசாரணைக்கு உத்தரவிடுகிறேன் என்று அவையில் அறிவித்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையின் ஒரு பகுதியாக, நடிகர் ரஜினிகாந்திடம் கூட வாக்குமூலம் வாங்கப்பட்டது. வீரப்பனுக்கு பணம் கொடுத்தது உண்மை என்றாலும் கூட, யாராவது பணம் கொடுத்தேன் என்று ஒப்புக்கொள்வார்களா ? ராஜ்குமாரின் மகன்கள் கூட பணம் கொடுக்கப்படவில்லை என்றனர். ரஜினிகாந்தும் மறுத்தார். இந்த விசாரணைக்காக ஒரு வருடம், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் நேரமும், உழைப்பும் வீணானது.
இதுபோன்ற, முன்யோசனை இல்லாத, நிதானம் தவறிய பேச்சுதான் ஜெயலலிதா புதனன்று சட்டப்பேரவையில் பேசிய பேச்சும். விஜயகாந்த் சுட்டிக்காட்டியதில் உண்மை இல்லாமல் இல்லையே.. பென்னாகரத்தில் டெபாசிட்டை அதிமுக இழந்தது உண்மைதானே.. அதற்கு முன் நடந்த மூன்று தொகுதிக்கான இடைத்தேர்தல்களில், அதிமுக போட்டியிடவே இல்லையே… ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சி, அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, எப்படியாவது இடைத்தேர்தலில் வெற்றி பெறும் என்பது அப்பட்டமான உண்மையாயிற்றே… இப்படி ஒரு சவாலை விடுவது, ஜெயலலிதாவுக்கு அழகா ?

விலைவாசி உயர்வைப்பற்றிப் பேசுவது எதிர்க்கட்சியின் கடமை. அதற்காகத்தான் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து சட்டசபைக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதற்கு உரிய முறையில் விளக்கமளிக்க வேண்டியது அரசின் கடமை. யாருமே எதிர்த்துப் பேசக்கூடாது என்று ஜெயலலிதா எதிர்ப்பார்ப்பது அறிவீனம்.
கடந்த சட்டசபைக் கூட்டத்தொடரில், அதிமுகவின் கூட்டணிக் கட்சித்தலைவர் சரத்குமார், ஜெயலலிதாவைப் பார்த்து, “நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேற…” என்று பாடியபோது, சிரிப்பை அடக்கமுடியாமல் மகிழ்ச்சியை தெரிவித்த ஜெயலலிதா, எதிர்க்கட்சிகள் குறையை சுட்டிக்காட்டினாலும் அதே போல மகிழ்ச்சியோடு பதில் சொல்ல வேண்டும். அந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே, தேமுதிகவின் மாஃபா பாண்டியராஜன் பட்ஜெட்டில் சில குறைகளை சொன்னதும், கடும் கோபமடைந்த ஜெயலலிதா, பாண்டியராஜன் விபரமறிந்து பேச வேண்டும் என்று எரிச்சலாக பதிலளித்து, பாண்டியராஜனை பேச விடாமல் தடுத்தார்.
இந்த கூட்டத்தொடரிலும், பண்ருட்டி ராமச்சந்திரன், தானே புயல்பாதிப்பு பற்றிப் பேசிய உடனேயே, எழுந்த ஜெயலலிதா, எனது அரசு போல, நடவடிக்கை எடுக்க உலகத்தில் அரசே இல்லை என்று கடும் கோபத்துடன் பதில் கூறினார். எதிர்த்து யாருமே கேள்வி கேட்காமல் இருக்க, மற்ற கட்சி உறுப்பினர்கள் செ.கு.தமிழரசன் போன்ற அடிமைகள் இல்லையே….
புதனன்று நடந்த விஜயகாந்த் மோதல் விவகாரத்திலும், ஜெயலலிதா நேர்மையில்லாமலேயே நடந்து கொள்கிறார். அரசு வெளியிட்ட படங்களிலும், ஜெயா டிவியில் வெளியான காட்சிகளிலும், விஜயகாந்த் நாக்கைக் கடித்துக் கொண்டு கோபப்படுவதை மட்டும் காட்டுகிறார்கள் ஆனால், அதிமுக அடிமைகள் செய்த கலவரத்தைக் காட்டவில்லை.
ஜெயலலிதா கண் முன்பாகவே, தரை டிக்கெட்டில் படம் பார்ப்பவர்கள் போல, ஏகவசனத்தில் விஜயகாந்தைப் பேசத் தொடங்கிய உடனேயே ஜெயலலிதா அதைக் கண்டித்திருக்க வேண்டாமா ? பால் விலை உயர்வைப் பற்றி பேசியதற்கு, பால்வளத்துறை அமைச்சர், எங்களால்தான் அவைக்கு வந்தீர்கள் என்று பேசிய உடனேயே ஜெயலலிதா அதைக் கண்டித்திருக்க வேண்டாமா ? ஏகவசனத்தில், அவனே, இவனே என்று கூக்குரலிடும் அதிமுகவினரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாரே ஜெயலலிதா ? இப்படி கூக்குரல் இட்டவர்களில், மன்னார்குடி மாபியாவுக்கு நெருக்கம் என்று அறியப்படும், கலைராஜன், சின்னசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரே முன்னணியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியாவது அம்மாவின் கடைக்கண் பார்வை கிடைக்காதா என்ற ஏக்கத்தில், அவர்கள் கொடுத்த காசுக்கு அதிகமாகவே கூவினர்.
விஜயகாந்த்தும், இன்னும் பக்குவப்பட வேண்டும். அவருக்கு அருகாமையில் அமர்ந்திருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு மூத்த அரசியல்வாதி. நிறைந்த அனுபவம் மிக்கவர். அவரின் வழிகாட்டுதலோடு, விஜயகாந்தும் பக்குவப்பட வேண்டும். இடதுசாரிகளோடு சேர்ந்து, விஜயகாந்த் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பதே, பெரும்பாலான மக்களின் எதிர்ப்பார்ப்பு.
தமிழக மக்கள் உள்ளாட்சித் தேர்தல்களில், அதிமுகவுக்கு அமோக வெற்றி கொடுத்ததற்கு காரணம், திமுக மீது அவர்களின் கோபம் தணியவில்லை என்பதே. இந்த உணர்வு இப்படியே இருக்குமா என்று சொல்ல முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் ஜெயித்தது போலவே, பாராளுமன்றத் தேர்தலிலும் 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வென்று விடலாம் என்று ஜெயலலிதா நினைத்தாரேயானால், அது தப்புத்தாளங்கள் தான்.
|
|
புதன்கிழமை, 01 பிப்ரவரி 2012 22:49 |
|
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம், ஏறக்குறைய ஆறு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்தப் போராட்டம் திடீரென்று எப்படி தொடங்கியது ? இதைத் தொடங்கி வைத்ததே அரசுதான். தினகரன் நாளேட்டில், ஜுலை மாதத்தில் வெளிவந்த செய்தியே இந்தப் போராட்டத்துக்கு தூண்டுகோலாக இருந்தது என்றால் அது மிகைச்சொல் அல்ல.

தினகரன் நாழிதழில் நாகர்கோவில் பதிப்பில், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் மக்கள் எப்படித் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று செய்தி வெளியாகியிருந்தது. அணு உலை விபத்து என்ற அறிவிப்பு வந்தால், வாயையும், மூக்கையும் பொத்திக் கொண்டு அருகாமையில் உள்ள கட்டிடத்தினுள் சென்று தஞ்சம் அடையுங்கள் என்றதே அந்தச் செய்தி. கூடங்குளம் அமைந்திருக்கும் மாவட்டப் பதிப்பில் வெளியிடப்படாமல், நாகர்கோயில் பதிப்பில், இந்தச் செய்தியை வெளியிடுவதே உள்நோக்கம் கொண்டது அல்லவா ? இந்த அயோக்கியத்தனத்தைப் பார்த்துதான் மக்கள் வெகுண்டெழுந்தார்கள். தன்னிச்சையாக மக்கள் திரளாக நின்று நடத்திய போராட்டம் இது.

ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள், பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர், கூடங்குளத்தை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வழங்கியே இத்திட்டம் கூடங்குளம் மக்கள் மீது திணிக்கப் பட்டது. வேலைவாய்ப்புகளையும், சிங்கப்பூராக மாற்றுவதையும் பார்க்க நாங்கள் உயிரோடு இருக்க வேண்டுமே என்றுதான் அந்த மக்கள் கேட்கிறார்கள். நாங்கள் உயிர்வாழ வேண்டும், எங்கள் வாயில் விஷத்தைத் திணிக்காதீர்கள் என்று சொல்லுவது தவறா ? வாழும் உரிமை, இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தால் உத்தரவாதப் படுத்தப் பட்டுள்ளதே…. இந்த அடிப்படை உரிமையின் பேரால்தானே இந்தப் போராட்டம் தொடங்கியது ?
மக்கள் தன்னிச்சையாக திரண்டு, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை, பள்ளிக்கூடங்களுக்கு குழந்தைகளை அனுப்புவதில்லை,க டைகளை திறப்பதில்லை, கறுப்புக்கொடி ஏற்றுவது, ரேஷன் கார்டுகளை திருப்பி தருவது, கிராமங்களில் கூடங்குளம் அணு உலையை மூடச்சொல்லி தீர்மானம் போடுவது என பல முடிவுகள் எடுக்கப்பட்டன. சுதந்திர தினம் கழிந்த உடனேயே ஆகஸ்டு 16 அன்று இடிந்த கரையில் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது என தீர்மானிக்கப்பட்டது. இப்படித் தொடங்கிய போராட்டம் தான் தினந்தோறும் நடந்து வருகிறது.
இந்தப் போராட்டத்தை சீர்குலைக்கவும், போராட்டம் நடத்துபவர்களையும், தலைவர்களையும், பல்வேறு பழிச்சொல்லுக்கு ஆளாக்கி எப்படியாவது இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்து, அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருவது மத்திய அரசு மட்டுமல்ல… ஊடகங்களும் சேர்ந்தே இதைச் செய்து வருகின்றன.
குறிப்பாக தினமலர் ஊடகம், இதை ஒரு தவமாகவே செய்து வருகிறது. தோழர் உதயகுமார், புஷ்பராயன் மற்றும், மைபா ஜேசுராஜனின் தொலைபேசி எண்கள், மெயில் ஐடிக்கள் ஆகியவற்றை வெளியிட்டு, அவர்களை மிரட்டியது. தொடர்ந்தும், போராட்டக் குழுவினருக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அணு சக்தி நல்லதா, கெட்டதா என்ற ஆராய்ச்சிக்கு, தோழர் ஞானி தான் வெளியிட்ட “ஏன் இந்த உலைவெறி ? அணு உலைகள்- வரமா, சாபமா ? ஒரு கேள்வி பதில் தொகுப்பு” என்ற வெளியீட்டின் இணைப்பு தரப்பட்டுள்ளது. தெளிவான விளக்கங்களோடு இருக்கும் அந்த நூல், வாசகர்களின் சந்தேகத்தை தெளிவுபடுத்தும்.
ஊடகங்களின் எதிர்ப்பு பத்தாது என்று, வக்கீல் வண்டு முருகன் போல, விஞ்ஞானி வண்டு முருகன் அப்துல் கலாம் வேறு, அவர் பங்குக்கு எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுகிறார். இங்கே ஆணி பிடுங்கியது பத்தாது என்று, இலங்கை சென்று ஆணி பிடுங்கி வந்திருக்கிறார். ஈழத்தில் தமிழகர்கள் – பெண்களும், குழந்தைகளும் – கொத்துக் குண்டுகளுக்கு இரையான போது, வாய் திறக்காத அப்துல் கலாம் அய்யர், இழவு வீட்டில் (இலங்கையில்) சென்று பள்ளி மாணவர்களுக்கு விரிவுரை ஆற்றியிருக்கிறார்.

அவர் யாழ்ப்பாண மாணவர்களுக்கு ஆற்றிய உரையில், “ மனசாட்சி என்பது, இதயத்தின் ஆத்மா, மனித இதயத்தில் இருந்து சுடர்விட்டு வழிகாட்டும் ஒரு பேரொளி. வாழ்க்கை எப்படி உண்மையோ அதைப்போன்றது அது. நேர்மைக்குப் புறம்பாகச் சிந்தித்தாலோ, நடந்தாலோ அது தன் எதிர்ப்பைக் காட்டும். மனசாட்சி என்பது நமது பாரம்பரியத்தில் வந்துதித்த ஒன்று. தப்பையும், சரியானவற்றையும் நமக்குச் சரியான நேரத்தில் உணர்த்தும் ஓர் அறிவார்ந்த மரபணு உண்மை. நமது குற்றங்களைப் பதிவு பண்ணும் ஒரு வாழ்க்கை புத்தகம். சார்பற்ற சாட்சியாக மனசாட்சி விளங்குகிறது. அது நம்மைப் பயமுறுத்தும். நம்பிக்கையைக் கொடுக்கும், பாராட்டும், தண்டனை அளிக்கும், நம்மைக் கட்டுக்குள் வைக்கும். ஒரு தடவை மனசாட்சி உறுத்தினால் அது எச்சரிக்கை. மறுமுறை உறுத்தினால் தண்டனை.”
இது மாணவர்களுக்கு அவசியம் அல்ல. அப்துல் கலாம், தான் பேசியவற்றை அவரே ஒரு முறை மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஈழ மக்கள் கொல்லப்பட்ட போதும், குஜராத்தில் இசுலாமியர்கள் படுகொலை செய்யப் பட்ட போதும், இவர் மனசாட்சியை எந்த மார்வாடிக் கடையில் அடகு வைத்தார் என்பதை. அப்துல் கலாம் அய்யர்தான் விளக்க வேண்டும்.

இந்த அப்துல் கலாமுக்கு, நடுத்தர படித்த வர்க்கத்தினர் மத்தியில் இருக்கும் நல்ல மதிப்பை, கூடங்குளம் போராட்டத்திற்கு எதிராக பயன்படுத்த நினைக்கும் மத்திய அரசின் சதிக்கு விசுவாசமான அடிமையாக தலையாட்டிக் கொண்டிருக்கிறார் அப்துல் கலாம். அப்துல் கலாம் செய்ததிலேயே மிகப் பெரிய அயோக்கியத்தனம், கூடங்குளம் சென்ற பிறகு அப்பகுதி மக்களுக்கு 200 கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் ஏற்பாடு செய்வதாகவும். இந்தப் பணத்தை வைத்து, அந்த மக்களுக்கு நல்ல குடிநீர், பள்ளிகள், வேலைவாய்ப்பு, மருத்துவமனைகள், மீனவர்களுக்கு மோட்டார் போட்டுகள், மற்றும் குளிர்வசதி கொண்ட வைப்பறைகளை கொடுக்க உதவி செய்வதாக அறிவித்ததுதான்.
போராட்டக்குழுவினர், அணு உலை தொடர்பாக சமரசத்துக்கு வரவில்லையென்றால் அதற்காக அவர்களுக்கு கொடுக்கப்படும் லஞ்சமல்லவா இது ? அணு உலைக்கு மக்கள் சம்மதிக்கவில்லையென்றால், அதற்காக அவர்களுக்கு பள்ளிகள் மருத்துவமனைகளை கட்டித் தரமாட்டார்களா ? குடிநீர் வசதி செய்து தரமாட்டார்களா ? கூடங்குளம் மக்களுக்கு இந்த லஞ்சத்தைத் தரும் கலாம், கல்ப்பாக்கம் பகுதி மக்களுக்கு இதே வசதியை ஏன் தர முன்வரவில்லை ? வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, அணு ஆயுத சோதனை நடத்தி, தென்கிழக்கு ஆசியப் பிராந்தியப் பகுதியையே அணு ஆயுதக் களமாக மாற்றி, தீராத பதற்றத்தை இப்பகுதியில் உருவாக்கியதைத் தவிர, அப்துல் கலாம் பெரிய சாதனை எதையும் செய்து விடவில்லை.
கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது இத்தனை நாள் தொடுத்த தாக்குதல்களின் உச்சக்கட்டமாக, நேற்று, மத்தியக்குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற, தோழர் உதயக்குமார் உள்ளிட்டவர்களின் மீது, இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள், கடும் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதல் வன்மையாக கண்டிக்கப் படவேண்டிய அதே நேரத்தில், இத்தாக்குதல் பல்வேறு உண்மைகளையும் உணர்த்துகிறது. அரசியல்களத்தில் நேர் எதிராக நிற்கும், காங்கிரசும், பிஜேபியும், அணு உலை விஷயத்தில் ஒரே கொள்கையைக் கொண்டுள்ளன என்பதை இந்தத் தாக்குதல் தெளிவாக உணர்த்துகிறது.
இத்தாக்குதல், மாநில அரசின் கட்டுப்பாட்டையும் மீறி, மத்திய உளவுத்துறையால், தமிழக காவல்துறை உதவியோடு நடந்தேறியிருக்கிறது என்பதே உண்மை.
பேச்சுவார்த்தைக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்லும் முன்பாகவே, இந்து முன்னணியினர் அந்த இடத்தில் ஒரு மணி நேரமாக காத்திருந்திருக்கின்றனர். இத்தகவல் அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் மூலமாக போராட்டக்குழுவினரை அடைந்து, அந்தக் குழுவினர், இத்தகவலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் தெரிவித்திருக்கின்றனர். தன்னை ஒரு நேர்மையான அதிகாரியாக அடையாளம் காட்டிக் கொள்ளும், கருணாசாகர் இத்தாக்குதலை தடுக்கத் தவறியுள்ளார்.


கமிஷனர் அலுவலகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் நடந்த இந்தத் தாக்குதல், கருணா சாகருக்கு தெரிந்தே நடந்திருக்கிறது என்றே சந்தேகிக்க வேண்டி உள்ளது. தாக்குதல் முடிந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கருணா சாகர், கூடங்குளம் போராட்டக்குழுவினர், இந்த வாயில் வழியாக வருவதற்கு பதிலாக, அந்த வாயில் வழியாக வந்து விட்டனர். இதனால்தான் தாக்குதல் நடந்திருக்கிறது என்று கருத்து கூறினார்.

ஜெயலலிதா வருகையில் இப்படி ஒரு தாக்குதல் நடந்திருந்தால், கருணாசாகர் இப்படி ஒரு விளக்கத்தை தருவாரா ?
உதயக்குமார் மீது சொல்லப்படும் மற்றொரு முக்கிய குற்றச்சாட்டு, அவர் அமெரிக்க உளவாளி என்பது. உதயக்குமார் அமெரிக்க உளவாளியாகவே இருக்கட்டும். வாயில் விஷத்தைத் திணிக்கும், அணு உலை போன்ற ஒரு விவகாரத்திற்கு எதிராக மக்களுக்காக போராட்டம் நடத்தும் உதயக்குமார்கள் அமெரிக்க உளவாளி இல்லை, பாகிஸ்தான் உளவாளியாக இருந்தாலும் சவுக்குக்கு சம்மதமே. உதயக்குமாரை அமெரிக்க உளவாளி என்று குற்றம் சொல்லும் அரசியல்வாதிகள், அமெரிக்க அதிகாரிகளிடம் அளவளாவிய விவகாரத்தைத்தான் விக்கிலீக்ஸ் புட்டு புட்டு வைத்துள்ளதே.
அணு உலை என்ற பேரால் இந்தியா முழுக்க நடத்தப்படும் அனைத்து உலைகளின் நோக்கமும், மின்சாரம் தயாரிப்பது அல்ல. அணு ஆயுதம் தயாரிப்பதே..!!! இதற்கு கல்பாக்கம் விதிவிலக்கு அல்ல.
இந்த கல்பாக்கம் அணு உலையின் ஆபத்துக்களை விளக்கி, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப்போராட்டம், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், 31 ஜனவரி அன்று கல்ப்பாக்கத்தில் நடைபெற இருந்தது. இந்த உண்ணாவிரதத்துக்கு காவல்துறையினர் அனுமதி தர மறுத்ததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆணை பெற்று ஜனவரி 31 அன்று போராட்டம் என திட்டமிடப்பட்டிருந்தது.


மத்திய உளவுத்துறை இந்தப் போராட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஜனவரி 30 அன்று, கல்ப்பாக்கம் அணு உலையில் பணிபுரியும் ஒரு ஊழியரை வைத்து, அவசர அவசரமாக ஒரு வழக்கை தாக்கல் செய்து, உயர்நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற விவகாரத்தை மறைத்து, ஏதோ அனுமதி பெறாமல் அந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுவது போல, ஜனவரி 30 அன்று, தடை உத்தரவு பெற்றது. இந்தத் தடை உத்தரவை எதிர்த்து வழக்காடுவதற்குள், ஜனவரி 31 கடந்து விட்டது.
இந்த அயோக்கியத்தனத்தை நீதிமன்றத்துக்கு விளக்கி, தடை ஆணையை ரத்து செய்து, வேறு ஒரு தினத்தில் மீண்டும் போராட்டம் அறிவிக்க வேண்டும். கல்பாக்கம் அணு உலையில் பணியாற்றும் ஒரு கடைநிலை ஊழியர், இது போல நீதிமன்றத்தை அணுகி ஒரு போராட்டத்தைத் தடை செய்வதற்காக போராடுவார் என்றா நினைக்கிறீர்கள் ?
பிஜேபி, காங்கிரஸ் என்ற இரு கட்சிகளுமே, அணு உலை எதிர்ப்பாளர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற ஒரே தளத்தில் நிற்கின்றன. இருப்பதிலேயே காங்கிரஸ் கட்சி ஒரு அயோக்கியத்தனமாக கட்சி என்றால், அந்தக் கட்சியோடு சங்பரிவாரும், ஊடகங்களும் சேர்ந்து கொண்டால்…. ? எத்தனை லட்சம் மக்கள் மாண்டாலும், அணு உலையை கொண்டு வந்தே தீர வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். நாம்தான் அவர்களை புரிந்து கொள்ளவில்லை.
|
|
|