|

பாண்டியன் அறைக்குள் நுழைந்த அலெக்ஸ், ‘‘இந்தாம்மா அர்ச்சனா, இந்த டி.வி.டி.யை பிளேயரில் போடு... என்ன இருக்குன்னு பார்க்கலாம். ஸோர்ஸ் ஒருவர் கொடுத்தார்’’ என்றார்.
அர்ச்சனாவும் டி.வி.டி.யை பிளேயரில் போட்டு ஓடவிட்டார். ‘மருத நாட்டு இளவரசி’ படம் ஓடியது.
‘‘சரி... சரி... நிறுத்திடும்மா. அது தொடர்பான செய்தியை கொடுத்தவர், கூடவே டி.வி.டி.யையும் கொடுத்திருக்கிறார். படம்தானே பிறகு பார்த்துக்கலாம். முதலில் செய்தியை பார்ப்போம்...’’ என்று செய்திக்குள் விரைந்தார் அலெக்ஸ். ‘‘கடந்த டிச. 12-ம் தேதி கோவையில் லீ மெரிடியன் ஹோட்டல் திறப்புவிழா மற்றும் ஜவுளித்துறை சம்பந்தமான நிகழ்ச்சி என இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் கலைஞரோடு மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் கலந்து கொள்ள ஏற்பாடாகி இருந்தது.’’
‘‘அதைத்தான் முதல்வர் ரத்து செய்துவிட்டாரே...’’
‘‘ஆமாம். அது தொடர்பான செய்திக்குத்தான் வருகிறேன். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ராசாவையும் அவர் தொடர்பான ஆட்களையும் குறிவைத்து பின்தொடருவது சி.ஐ.டி. காலனி வரையில் தொடரும் என்கிற தகவல் டெல்லியிலிருந்து வந்து கொண்டே இருக்கவும் கடுமையாக அப்செட் ஆனாராம் முதல்வர். கோவை நிகழ்ச்சிக்குப் போய்விட்டு, அங்கிருந்து டாப் ஸ்லிப் சென்று மூன்று நாட்களுக்கு ஓய்வெடுத்துவிட்டு வரலாம் என்றுதான் பயணத் திட்டங்களில் இருந்ததாம். முதல்வர் அப்செட்டாக இருந்ததால், கோவை பயணம் கடைசி நேரத்தில் ரத்தானதாம்...’’
‘‘ஓ... இதுதான் காரணமா?’’
‘‘பின்னே... முதல்வர் கோவைக்கு வராமல் போனதில் அங்கிருக்கும் கலெக்டர் முதல் வருவாய்த்துறை, ஜவுளித்துறை அதிகாரிகளெல்லாம் ரொம்பவும் அப்செட்டானார்களாம். காரணம், முதல்நாள் இரவு பதினோரு மணி வரையில் முதல்வர் வருகைக்காக எல்லா ஏற்பாடுகளையும் முன்னின்று கவனித்தவர்களாயிற்றே. வருத்தப்படாமல் என்ன செய்வார்கள்?’’
‘‘அதான், முதல்வர் வீடியோ கான்பரன்ஸிங் முறையில் சென்னை கோட்டையில் வைத்தே நிகழ்ச்சிகளை முடித்துவிட்டாரே...’’
‘‘அதை தவறு என்று யாரும் சொல்லவில்லையே... அந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பின்னாலும் முதல்வரின் மன இறுக்கம் கொஞ்சமும் குறையவில்லையாம். ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்தே நிறைய பேசிக் கொண்டிருந்தாராம். இறுக்கத்துடனேயே அன்றைக்கு இரவு தூங்கப் போனாராம். ஆனால், வெகு நேரம் அவருக்கு தூக்கமே வரவில்லையாம்...’’
‘‘ஐயையோ... அப்புறம்?’’
‘‘இந்த விவரம் மறுநாள் காலை வழக்கம்போல முதல்வர் வீட்டுக்கு வந்து பணிகளை கவனிக்க ஆரம்பித்த செயலாளர் ராஜமாணிக்கத்துக்கு தெரியவும், அவரும் அப்செட் ஆனாராம். சென்னையில் இருந்தால், முதல்வர் மேற்கொண்டு அப்செட் ஆவார் என்று நினைத்த அவர், ‘முதல்வரை எங்காவது ஒரு மலைவாசஸ்தலத்துக்கு அழைத்துப் போங்களேன்... இரண்டு, மூன்று நாட்கள் அங்கிருந்துவிட்டு திரும்பினால், கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்...’ என்று கட்சித் தலைவர்கள் சிலரிடம் சொன்னாராம்.’’
‘‘அதன்பிறகுதான் முதல்வர் ஏலகிரிக்குப் பயணப்-பட்டாராக்கும்?’’
‘‘ஆமாம். மறுநாள் 13&ம் தேதி காலையிலேயே அமைச்சர்கள் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் ஆகியோரோடு ஏலகிரிக்குச் சென்றார் முதல்வர். அங்கு சென்ற பிறகும் வழக்கமாக இருக்கும் எந்த சந்தோஷமும் முதல்வரிடம் தென்படவில்லையாம். இந்தமாதிரி ரெஸ்டுக்காகச் செல்லும்போது அங்கே சீட்டாடுவது முதல்வரின் வழக்கமாம். ஆனால், இம்முறை அங்கே அப்படி எதுவும் நடக்கவில்லையாம்... டி.வி.டி. பிளேயரை ஓடவிடச் சொல்லி, மூன்று படங்களை வரிசையாகப் பார்த்தாராம்...’’
‘‘ஓ... அதில் ஒரு படம்தான் மருத நாட்டு இளவரசி, சரியா?’’
‘‘சரிதான். பராசக்தி, மந்திரிகுமாரி ஆகியவைதான் மற்ற இரண்டு படங்கள். இதில் என்ன சிறப்புத் தெரியுமா? இந்தப் படங்களுக்கு கலைஞர்தான் வசனம் எழுதியிருந்தார். கலைஞரோடு சேர்ந்து கம்பெனிக்காக படம் பார்த்தவர்கள், ‘அந்த காலத்திலேயே இப்படியொரு படமா? வசனத்துல அசத்திட்டீங்க தலைவரே...’ என்று கலைஞருக்கு ஏலகிரி குளிரிலும் ஐஸ் கட்டியை தூக்கி வைக்க, அவர் அதை ரசிக்கவில்லையாம்.’’
‘‘அங்கு சென்றும் அவருடைய இறுக்கம் தளரவில்லையா?’’
‘‘ஆமாம். அதனால்தான் மூன்று நாட்கள் போடப்பட்ட பயணத் திட்டத்தில் மாறுதல் செய்து இரண்டாம்நாளே அங்கிருந்து கிளம்பி சென்னை வந்துவிட்டார். மூன்றாம் நாள் காலை எட்டேகால் மணிக்குத்தான் கிளம்புவதாகத் திட்டம். இதற்காக அன்று காலை சாப்பாட்டுக்காக முதல்வருக்கு பிடித்த இடியாப்பம், பாயாவெல்லாம் தயார் செய்வதாக இருந்தார்கள். ஆனால், இரண்டாம் நாள் மாலை ஆறே முக்கால் மணிக்கே அங்கிருந்து கிளம்பி பதினோரு மணிக்குள்ளாக சென்னை வந்து சேர்ந்து விட்டாராம்...’’ ‘‘அவருக்குத்தான் எத்தனை தொடர் நெருக்கடிகள்?’’
‘‘இதற்கிடையில் சென்னை அண்ணாசாலையில் வாங்கப்பட்ட ‘வோல்டாஸ்’ கட்டடம் ஒன்றும், கலைஞர் குடும்பத்தை பெரிய சிக்கலுக்கு ஆளாக்கி இருக்கிறதாம். ஆறுமுகம் செட்டியார் என்பவரின் வாரிசுகளிடமிருந்துதான் அந்தக் கட்டடத்தை ராசாத்தியம்மாளின் உதவியாளராக இருந்த சரவணன் பவர் வாங்கினாராம். பின்பு அதை டாக்டர் சண்முகநாதன் என்பவர் பெயருக்கு மாற்றியிருக்கிறார்கள். இந்த சண்முகநாதன் யார் என்கிற விசாரணை பல மட்டங்களிலும் வேகமாக நடந்து கொண்டிருக்கிறதாம்...’
’ ‘‘ஐயையோ...’’
‘‘ஆமாம். இந்த சண்முகநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வரை சந்தித்துப் பேசி விட்டுச் சென்றிருக்கிறாராம். இதற்கிடையில், மிக சமீபத்தில் குறிப்பிட்ட அந்த கட்டடத்தை சங்கல்பம் இண்டஸ்ட்ரீஸ் பெயருக்கு ஆவணங்களை மாற்றியிருக்கிறார்களாம். இதுவும் தீவிர விசாரணைக்கு உள்ளாகி இருக்கிறதாம்...’’
‘‘போச்சுடா...’’
‘‘அதேபோல விருகம்பாக்கம் வேம்புலியம்மன் கோயில் தெருவில் உள்ள சுமார் 77 கிரவுண்ட் இடமும், அண்ணா சாலையில் உள்ள பிரபல தியேட்டர் வளாகம் உள்ளிட்ட சில இடங்களும் அவசரம் அவசரமாக பெயர் மாற்றம் பெற்றிருக்கின்றன. இதெல்லாம் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் அவருடைய சகோதரர் மு.க. அழகிரிக்கும் தெரியவர, உச்சகட்டக் கோபத்தில் ஆழ்ந்துவிட்டார்களாம். இருவரும் முதல்வரை சந்தித்தபோது, இது தொடர்பாகப் பேசி தங்களுடைய கடுமையான அதிருப்தியை முதல்வரிடம் தெரிவித்தார்களாம். ‘அந்த குடும்பத்துக்காரர்கள் செய்த தவறுகளுக்காக இன்னும் என்னவெல்லாம் சுமக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்க, முதல்வருக்கு தர்மசங்கடமான நிலைதான்...’’
‘‘இருக்காதா பின்னே..?’’
‘‘அண்ணா சாலை சொத்து வாங்கியது தொடர்பாக கடுமை-யான அதிருப்தியில் இருக்கும் மத்திய அமைச்சர் அழகிரி, சமீபத்தில் தமிழக உளவுத்-துறை ஐ.ஜி.யான ஜாபர் சேட்டை சந்தித்தபோது அவரை நோக்கி கடுமையான வார்த்தை வீச்சு நடத்தினாராம்.’’
‘‘அவருக்கு இதில் என்ன சம்பந்தம்?’’
‘‘இருக்கப் போய்தானே அழகிரி கோபப்படுகிறார். ‘உளவு அறிவால் தமிழகத்தையே தன்னுடைய கரங்களில் வைத்திருக்கிறார்’ என்று முதல்வராலேயே பாராட்டப்படும் உங்களுக்குத் தெரியாமல், இந்த மாதிரி இடம் வாங்குவதும், பவர் வாங்குவதும், பின்னாளில் பினாமியாக ஒருவரை கொண்டு வந்து திணிப்பதும் நடந்ததா? அப்படி உங்களுக்குத் தெரியாமலேயேதான் இதெல்லாம் நடந்தது என்றால், நீங்கள் என்ன உளவு பார்த்தீர்கள்?’’ என்று கேள்வி மேல் கேள்வியை லாஜிக்காக கேட்டு, ஜாபரிடம் கடுமை காட்டினாராம்...’’
‘‘அதற்கு ஜாபரின் ரியாக்ஷன் என்னவாம்?’’
‘‘இதற்கெல்லாம் நான் என்ன செய்ய முடியும் என்பதுதான். இருந்தாலும், ‘அழகிரி இப்படித் தேவை-யில்லாமல் தன்னை வறுத்தெடுக்க வேண்டியதில்லை... முதல்வர் குடும்பத்தில் சிலரோடு நெருக்கமாக இருந்த-தற்காக இன்னும் என்னவெல்லாம் விமர்சனத்தை எதிர்க்கொள்ளப் போகிறேனோ?’ என்று நண்பர்களிடம் சொல்லி வருந்துகிறாராம் ஜாபர்.’’
‘‘வருத்தம் இருக்கத்தானே செய்யும்? சரி, ஸ்பெக்ட்ரம் விவகாரம் எப்படி போகும்?’’
‘‘ரொம்பவும் சீரியஸாகத்தான் போகும்-போல... சி.பி.ஐ. இந்த விவகாரத்தை அவ்வளவு லேசாக விடாது என்பதுதான் இன்றைய நிலைமை. அவர்கள் ராசா மற்றும் அவர் தொடர்புடைய ஆட்கள் என்று நிறைய விஷயங்களை ஏற்கனவே கத்தை கத்தையாக திரட்டி வைத்துக் கொண்டுதான் ரெய்டுக்காக தமிழகத்துக்கு வந்திருக்கிறார்கள்.’’
‘‘ஓ...’’
‘‘முதலில் சாதிக்கை வளைத்தவர்கள், அவரிடமிருந்து ஒரு டைரியை கைப்பற்றிச் சென்றார்கள். கூடவே, தாங்கள் திரட்டிய தகவல்களையெல்லாம் வைத்து அவரிடம் வெகுநேரம் விசாரணை நடத்தினார்கள். அதில், அவர் நிறைய விஷயங்-களை மறுக்க முடியாமல் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டு விட்டாராம். அதன்பிறகுதான், சி.பி.ஐ. அதிகாரிகள் தமிழகத்துக்கு மீண்டும் வந்து பிரபல பத்திரிகையாளரான நக்கீரன் காமராஜ், ஜெகத் கஸ்பர் மற்றும் ராசா ஆடிட்டர் கணபதி உட்பட பலருடைய வீடு, அலுவலகங்களுக்குள் அதிரடியாகப் புகுந்து புறப்பட்டிருக்கிறார்களாம்...’’
‘‘அப்ப அடுத்தது?’’
‘‘அதான், முன்பே தெளிவாகச் சொன்னேனே... சி.ஐ.டி. காலனிதான். ராசாத்தியம்மாள் மற்றும் கனிமொழி மீதுதான் சி.பி.ஐ. அதிகாரிகளின் மொத்தப் பார்வையும் படிந்திருக்கிறது. எந்த நேரமும் சி.பி.ஐ. அதிகாரிகள் கனிமொழியை நெருங்கலாம் என்பதுதான் இப்போதைய நிலவரம்.’’
‘‘காமராஜ், ஜெகத் கஸ்பர், அகிலன், ராஜேஷ் ஜெயின் வீடுகளுக்கு டிச.15-ம் தேதியன்று சி.பி.ஐ. அதிகாரிகள் புகுந்து புறப்பட்ட போதே அதைச் செய்திருக்கலாமே..?’’
 ‘‘அப்படியெல்லாம் அவசரப்பட்டு செய்யக்கூடிய காரியமா இது? வரிசை-யாகத்தான் ரெய்டுகளை நடத்து-வார்கள். தொடர்ந்து ஆவணங்கள், வாக்கு-மூலங்-களெல்லாம் பெறப்பட்டுத்தான் கனிமொழி வீட்டுக்குப் போவார்கள். முதல்வரின் மகளில்லையா? அவர் இருப்பதும் முதல்வரின் சி.ஐ.டி. காலனி இல்லத்தில்தானே? அதனால்தான் இத்தனை தூரம் பொறுமையாம். இருந்தாலும், முதல்வர் வீட்டுக்கு ரெய்டு நடத்தச் செல்வதற்கு முன்பாக அரசுத் தரப்பில் செய்ய வேண்டிய சம்பிரதாய முறை-களை-யெல்லாம் பின்பற்ற வேண்டியது குறித்தெல்லாம் சி.பி.ஐ. வட்டாரத்தில் தீவிரமாக ஆலோசனை நடந்திருக்கிறது...’’
‘‘என்ன ஆலோசனை?’’
‘‘முதல்வர் வீட்டுக்கு சோதனை நடத்துவதற்கு முன்பாக மாநில கவர்னரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதுதான் நடைமுறையாம். ‘ஆனால், ராசாத்தியம்மாள் வீட்டுக்கு அப்படியொரு அனுமதி தேவையில்லை’ என்று சி.பி.ஐ.யின் கூடுதல் இயக்குநரான பல்வீந்தர் சிங் சொல்லி விட்டாராம். அதனால், கவர்னர் அனுமதியில்லாமலேயே கனிமொழி வீட்டுக்குள் சி.பி.ஐ. அதிரடியாக புகும் என்பதுதான் சி.பி.ஐ. வட்டாரத்திலிருந்து வெளியாகும் லேட்டஸ்ட் தகவல்.’’ என்ற அலெக்ஸ், பாண்டியன் முகத்தை பார்த்துவிட்டு, தன்னிச்சையாகவே ஸ்பெக்ட்ரம் தவிர்த்த அடுத்த சப்ஜெட்டுக்கு மாறினார்.
‘‘எந்திரன் படத்தின் மூலம் பல கோடிகளை சம்பாதித்த நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் பணத் தட்டுப்பாடு. நினைத்தால், பல கோடி ரூபாயை நொடியில் புரட்டக் கூடிய அளவுக்கு வசதி படைத்த ரஜினி வீட்டிலா இப்படியொரு சம்பவம் என்று கேட்டு ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.’’
‘‘பில்டப் தேவையில்லை. நேரடியாக விஷயத்துக்கு வரலாம்...’’
‘‘மும்பையைச் சேர்ந்த பைனான்சியர் சுசில்குப்தா. இவரிடமிருந்து ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா பணம் வாங்கியிருந்தார். அதைத் திருப்பிக் கொடுப்பதில் சிக்கல் இருக்கிறது. கேட்டுக் கேட்டுப் பார்த்து ஓய்ந்து போன பைனான்சியர், கடந்த டிச.13&ம் தேதி நேரடியாக போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கே சென்று விட்டார். போயஸ்தோட்டம் இரண்டாவது தெருவில் இருக்கும் ரஜினி மனைவி லதாவின் அலுவலகத்துக்கும் சென்றவர், பணத்தைக் கேட்டு தகராறு செய்திருக்கிறார். அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை துவம்சம் செய்தவர், கம்ப்யூட்டர்களையும் உடைத்தாராம்.’’
‘‘லதா ரஜினிகாந்த் அலுவலத்திலேயேவா இப்படி?’’
‘‘உடனே, இந்தத் தகவல் ஏலகிரியிலிருந்த முதல்வர் கவனத்துக்குச் சென்றுவிட்டதாம். பதட்டமான முதல்வர், ‘விஷயத்தை வெளியே தெரியாமல் டீல் பண்ணுங்க...’ என்று போலீஸுக்கு உத்தரவு போட்டாராம். அப்புறமென்ன, தங்கள் பாணியில் சுசில்குப்தாவை டீல் செய்து அனுப்பிவிட்டதாக போலீஸ் வட்டாரத்திலிருந்து தகவல்...’’என்ற அலெக்ஸ், ‘மந்திரிகுமாரி’ படத்தின் பாடல் ஒன்றை பாடியபடியே தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார்.
அன்றே சொன்ன ‘தமிழக அரசியல்’... ஸ்பெக்ட்ரம் விவகாரம் பூதாகரமாக வெடித்துக் கிளம்பியதும், பவர் புரோக்கர் பெண்மணி நீரா ராடியா தி.மு.க. தொடர்பிலானவர்களிடம் பேசிய பேச்சுப் பதிவுகளெல்லாம் வரிசையாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதில் தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை, நீரா ராடியாவிடம் பேசிய பேச்சுப் பதிவு ஒன்றும் வெளியாகப் போகிறது என்பதைக் கடந்த 02.12.2010 தேதியிட்ட ‘தமிழக அரசியல்’ இதழில் அலெக்ஸ் & பாண்டியன் பகுதியில் குறிப்பிட்டிருந்தோம்.
செய்தி வெளியான சில தினங்களிலேயே அமைச்சர் பூங்கோதை, நீரா ராடியா பேச்சுக்கள் அடங்கிய பதிவு வெளியாகி, அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
 பதிவில், மத்திய அமைச்சர் அழகிரி குறித்து இருவரும் சுவாரஸ்யமாக பேசுகிறார்கள். அப்போது, அழகிரி குறித்து கருத்து பரிமாறும் நீரா ராடியா, ‘‘அவர் ரொம்ப நாளைக்கு டெல்லியில் காலம் தள்ளுவார் என்று தெரியவில்லை. அதற்கான தகுதிகள் அவரிடம் இருப்பதாகவும் தெரியவில்லை...’’ என்று சொல்கிறார். உடனே அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசும் பூங்கோதை, ‘‘அவர் அரசியலில் நம்பவைத்து கழுத்தை அறுக்கக் கூடியவர்...’’ என்ற தொனியில் சொல்கிறார். ஏற்கனவே ஒருமுறை இப்படித்தான், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த உபாத்யாயாவிடம் பேசி, தன்னுடைய உறவினர் ஒருவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்க சிபாரிசு செய்யும் டெலிபோன் பேச்சுப் பதிவு வெளியாகி சர்ச்சையை உண்டுபண்ணி, பதவி இழக்க வேண்டி வந்தது. அதைவிட ஒரு மோசமான சிக்கலில் இப்போது சிக்கியிருக்கிறார் பூங்கோதை.
அவருடைய அந்தப் பேச்சால், மத்திய அமைச்சர் அழகிரி ரொம்பவே கொதித்துப் போயிருக்கிறாராம். அவருடைய ஆதரவாளர்கள் அமைச்சர் பூங்கோதை மீது கடுமையான ஆத்திரத்தில் இருக்கிறார்கள். இதனால் தென் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய சொந்த ஊருக்குப் போய்த் திரும்பும்போது சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடலாம் என்றும் சொல்கிறார்கள்.
அப்ரூவர் சாதிக்? ஸ்பெக்ட்ரம் விவகாரம் விஸ்வரூபமெடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் முதல்கட்டமாக ஆ.ராசாவின் நண்பரான பெரம்பலூர் சாதிக்கை கடந்த சில நாட்களுக்கு முன்பாக வளைத்தார்கள். அவருடைய வீட்டில் நடந்த ரெய்டுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிய சாதிக்கை, ரெய்டு முடித்த கையோடு தீவிர விசாரணைக்காக அழைத்துச் சென்றார்கள். அதற்கு முன்பாக இந்த விஷயத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் சாதிக்கின் மனைவியிடமும் தெரிவித்திருக்கிறார்கள்.
அதிகாரிகளோடு விசாரணைக்காக புறப்படுவதற்கு முன்னால், சாதிக்கிடம் விரிவாக பேசிய அவருடைய மனைவி, ‘‘இதெல்லாம் தேவையில்லை என்று ஆரம்பத்திலிருந்தே நான் சொல்லிக் கொண்டிருந்தேன். கேட்கலை. இப்போது விவகாரம் சி.பி.ஐ. ரெய்டு வரையில் வந்து நிற்கிறது. மானம் போகிறது. இனியும் என்னால் பொறுமையாக இருக்க முடியாது. நீங்கள் சி.பி.ஐ. விசாரணையில் அதிகாரிகள் கேட்கும் அத்தனை விவரங்களையும் கொடுத்துவிடுங்கள். மறைக்க வேண்டாம். அதிகாரிகளுக்கு ஒத்துழைக்காமல் போய் அதனால் ஏதேனும் பிரச்னை என்றால், நான் தற்கொலை செய்து கொள்வேன்...’’ என்று தடாலடியாகச் சொல்லிவிட்டாராம். இதனால் அதிர்ந்து போன சாதிக், க்ரீன் ஹவுஸ் புரமோட்டார்ஸ் நிறுவனத்தை எப்படி ஆரம்பித்தேன், அதற்கு பணம் எப்படி வந்தது என்பது உட்பட பல்வேறு தகவல்களையும் தெள்ளத் தெளிவாக விசாரணையில் சொல்லிவிட்டாராம். இந்த வழக்கில் கிட்டத்தட்ட அவர் அப்ரூவர் ஆகிவிட்ட மாதிரிதானாம்.
என்ன காரணம்? ‘‘தமிழ்நாட்டுக்கு பிரதமர் செல்லும்பட்சத்தில், விடுதலைப்புலிகளால் ஆபத்து இருக்கிறது...’’ என்று, மத்திய உளவுத்துறை பிரதமருக்கு திடீர் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
உடனடியாக இதற்கு ரியாக்ட் செய்திருக்கும் தமிழக டி.ஜி.பி. லத்திகா சரண், ‘‘பிரதமர் பத்திரமாக தமிழகம் வந்து செல்ல பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக போலீஸ் செய்யும்...’’ என்று சொல்லியிருக்கிறார்.
‘விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் முற்றிலுமாக ஒடுக்கப்படுவிட்டது’ என்று சொல்லும் நிலையில், மத்திய உளவுத்துறை இப்படி திடுமென அதிர்ச்சித் தகவல் ஒன்றை கசியவிட்டிருப்பதன் பின்னணி புரியாமல் குழம்பிப் போயிருக்கிறது தமிழக அரசும், தி.மு.க. தரப்பும்! |
Comments
தமிழ் வாத்தியார் = கடைகாரரே இந்த கனி-யின் விலை என்ன?
கடைக்காரர் = ஆ.ராசா கோபம் கொள்வார் பழத்தின் விலை என்ன என்று கேளுங்கள் என்றார்.
Katturai Arumai..
என்ன காரணம்?
DMK functionil PM(Congress) kalanthukkamal irukka ulavuthurai moolamaga congress ithai seithirukkalam, poruthirinthu parpom. PM varuvara varamattara endru.
மனிதனாகப்பிறந்த வனுக்கு கொஞ்சமேனும் மான உணர்வு இருக்கவேண்டும்.
Some body shold also move court for Housing Board illegal allotments like Mumbai.And also Krishna moorthy(Justice Reghupathy terroriser),Jag adrakshakan College cases.
RSS feed for comments to this post